

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹனுமந்த் ராயப்பா (43). அரசு பேருந்தின் ஓட்டுநரான இவர் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு கலபுரகியில் இருந்து 84 கி.மீ தொலைவில் உள்ள சின்சோலிக்கு அரசு பேருந்தை இயக்கினார்.
சின்சோலியை அடைய 6 கிமீ தூரம் இருந்த நிலையில் பேருந்தின் முகப்பு விளக்குகள் திடீரென செயலிழந்தன. இதனால் நடத்துநர் மஞ்சுநாத் பேருந்தில் நின்றவாறு செல்போன் டார்ச் லைட்டை ஒளிரச் செய்ய, அதன் வெளிச்சத்தில் ஓட்டுநர் ஹனுமந்த் ராயப்பா இடைவிடாமல் பேருந்தை இயக்கினார்.
குண்டும் குழியுமான சாலையில் செல்போன் டார்ச் வெளிச் சத்தில் பேருந்தை இயக்கியதை பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத் தளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா கூறுகையில், “காங்கிரஸ் அரசின் தோல்வி அப்பட்டமாக தெரிகிறது. கல்யாண கர்நாடகாவில் போதுமான பேருந்துகள் இல்லாத நிலையில், மக்கள் அன்றாடம் தங்களின் உயிரைப் பணயம் வைத்தே அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்” என்றார்.