

சென்னை: விசிக விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக தவெக வந்தது.
திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்ததால் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமல்தான் இருந்தது. தவெகவை நாங்கள் விமர்சித்திருக்கிறோம். ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என்று விமர்சித்துவிட்டு, தற்போது ஆதரவு கொடுக்கிறோம்.
ஆனால் ஏன் ஆதரவு என்பதை பலமுறை விளக்கமளித்துள்ளேன். திமுக கூட்டணியில் தொடர்கிறோமா என்று கேட்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்று திமுக தலைமையே அறிவித்துவிட்டது.
இதுவரை நான் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கிறோமோ என்றும் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணி தொடர்பாக ஜூலை 1-ம் தேதி கூட்டத்தில் பேசியுள்ளோம்.
அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒருவேளை தவெக தலைமையில் கூட்டணி உருவானால், அதில் இடம்பெறுவோம் அதில் எந்த ஐயமுமில்லை.
திமுக தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விசிகவிலிருந்து ஒருவரை அழைத்து கட்சியில் இணைத்தபோது, திமுக தலைமையே எங்களுடன் உறவு இல்லை எனச் சொல்லிவிட்டது. விசிகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னது மு.க.ஸ்டாலின் தான்.
35 ஆண்டு உழைப்பு
திமுக கூட்டணியை விட்டு வெளியே வரக்கூடிய அளவுக்கான நெருக்கடி எங்கே வந்தது, எப்போது வந்தது, அதை ஏன் இன்னும் அதிகாரப்பூர்வமாக நீங்கள் அறிவிக்கவில்லை என்று கேட்கிறவன் எனக்கு வேண்டும்.
இந்த அரசியல் புரிதல் எனக்குத் தேவை. அந்த விவாதம் நடைபெற வேண்டும். அதிமுக கூவிக் கூவி அழைத்தது என்று சொல்கிறீர்களே, அப்படியென்றால் ஏன் அதிமுகவோடு நீங்கள் கூட்டணி வைக்கவில்லை என்ற கேள்வியை எழுப்புகிற தம்பிகள் நமக்கு வேண்டும். அதுதான் ஆளுமை, அதுதான் தலைமைத்துவம்.
பாஜகவிலே அமைச்சரானாலும் சரி, பாஜகவிலே எங்களுக்கு ஒரு பதவி வாங்கித் தாருங்கள் என்று கேட்பவர்களாக என்னோடு இருக்கிறீர்கள் என்றால், என் 35 ஆண்டுகால உழைப்பு வீணாகிவிட்டது என்று பொருள்.
அந்த அரசியல் புரிதல் உள்ளவர்களை நான் இன்னும் வளர்த்தெடுக்கவில்லை என்றுதான் பொருள். அப்படித்தான் நான் நினைத்து நொந்து போய் கிடக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.