

நெதர்லாந்து மன்னருக்கு வழங்கப்பட்ட ஜெய்ப்பூர் கலைப்பொருட்கள், மெலோனிக்கு வழங்கப் பட்ட முகா பட்டு சால்வை.
புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்துள்ளார்.
இந்தப் பயணத்தில் இந்தியாவின் பாரம்பரியம், வேளாண்மை, மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பரிசுப் பொருட்களை உலகத் தலைவர்களுக்கு அவர் வழங்கினார்.
இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றபோது, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு, பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பட்டு சால்வைகளை (முகா பட்டு சால்வை, ஷிருய் லில்லி பட்டு சால்வை) மோடி பரிசாக வழங்கினார்.
அசாமின் ‘தங்கப் பட்டு' என்று அழைக்கப்படும் முகா பட்டு, பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கின் அரிய வகை கைத்தறி ஜவுளியாகும். செயற்கை சாயங்கள் ஏதுமின்றி, அதன் இயற்கையான தங்க நிறம், நீடித்து உழைக்கும் தன்மை, சூழலுக்கு பாதிப்பில்லா தயாரிப்பு ஆகியவற்றுக்காக இது மிகவும் மதிக்கப்படுகிறது.
இத்தாலிய அதிபர் செர்ஜியோ மட்டரெல்லாவுக்கு, பாரம்பரிய பளிங்கு வேலைப்பாடு கொண்ட பெட்டியுடன் இந்திய இசை மேதைகளான பண்டிட் பீம்சென் ஜோஷி, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் இசை குறுந்தகடுகளையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கியூ டோங்யுவிடம் இந்தியாவின் மிகச்சிறந்த தானியங்களின் தொகுப்பை பிரதமர் மோடி வழங்கினார்.
இதில் கேரளா வின் பாலக்காடு சிவப்பு அரிசி, மேற்கு வங்கத்தின் கோவிந்தோபோக் அரிசி, இந்தோ-கங்கை சமவெளியின் பாஸ்மதி அரிசி, அசாம் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கின் ஜோஹா அரிசி, உ.பி.யின் காலாநமக் அரிசி ஆகியவை இடம்பெற்றிருந்தன.
நார்வே பட்டத்து இளவரசருக்கு வழங்கப்பட்ட கலம்காரி ஓவியம், ஐ.நா. அதிகாரிக்கு வழங்கப்பட்ட சிறுதானிய பிஸ்கட்.
பாரம்பரிய தானியங்களுடன் சேர்த்து, ஆரோக்கியமான சிறுதானிய ஸ்நாக்ஸ்களை கியூ டோங்யுவுக்கு பிரதமர் மோடி வழங்கினார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு குஜராத்தின் அரிய ஜவுளி பாரம்பரியமான, ‘வாழ்வின் மரம்' வடிவத்தை கொண்ட ரோகன் ஓவியம் வழங்கப்பட்டது.
மேலும், புவிசார் குறியீடு பெற்ற கேசர் மாம்பழங்கள், மேகாலயா அன்னாசிப் பழங்கள் உள்ளிட்ட பாரம்பரிய இந்திய விளைபொருட்களும் வழங்கப்பட்டன.
சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சனுக்கு கைவினைப் பொருளான சாந்திநிகேதன் தூதுவர் பை மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
மேலும் மணிப்பூரின் லோக்டாக் தேநீரையும் அவர் வழங்கினார். ரசாயனங்கள் இல்லாத தோட்டங்களில் பயிரிடப்படும் இந்த தேநீர், வடகிழக்கு இந்தியாவின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்போடு நெருங்கிய தொடர்புடையவை.
சுவீடன் பிரதமருக்கு கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக 'பஷ்மினா' என்று அழைக்கப்படும் லடாக் தூய கம்பளி சால்வையையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
இமயமலையின் கடுமையான சூழ்நிலைகளைத் தாங்கி வாழும் சாங்தாங்கி ஆடுகளிடமிருந்து இந்த கம்பளி பெறப்படுகிறது. நார்வே இளவரசர் ஹாகோனுக்கு சூரியன் மற்றும் சந்திரன் வடிவங்கள் கொண்ட கலம்காரி ஓவியத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இது ஆந்திரப் பிரதேசத்தின் பழமையான ஜவுளி கலை வடிவமாகும்.
நார்வே ராணி சோன்ஜாவுக்கு ஒடிசாவின் பழமையான கலை வடிவங்களில் ஒன்றான பனை ஓலை பட்டசித்ரா வழங்கப்பட்டது. நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோருக்கு சிக்கிம் மாநிலத்தின் ஆர்க்கிட் ஓவியங்கள் மற்றும் ஆர்க்கிட் பேப்பர் வெயிட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.
நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுக்கு மீன் வடிவத்தைக் கொண்ட மதுபானி ஓவியத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டருக்கு ஜெய்ப்பூரின் நீல மண்பாண்டத்தை பரிசாக வழங்கினார்.
இது குவார்ட்ஸ் தூள், கண்ணாடி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் தனித்துவமான வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்ற ஒரு புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருளாகும். நெதர்லாந்து ராணி மாக்சிமாவுக்கு ராஜஸ்தானின் மீனாகாரி மற்றும் குந்தன் வேலைப்பாடு கொண்ட கம்மல்கள் பரிசாக வழங்கப்பட்டன.