

கொச்சி: கேரளாவில் உள்ள சபரிமலை தர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோயிலில் விற்பனை செய்யப்படும் அபிஷேக நெய்யில், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி முதல் 2025ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
குறிப்பாக கோயிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 16,628 பாக்கெட் நெய்யில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் 43 பேர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. நெய் பாக்கெட்டின் விற்பனைத் தொகை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செலுத்தப்படவில்லை என்றும், இதனால் ரூ.17 லட்சத்துக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஊழல் தடுப்புத்துறை அளித்த புகாரின் அடிப்படையில், கேரள உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து உடனடி குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன், கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: இது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா ஆகியவற்றின் கீழ் குற்றங்களாக பதிவு செய்யப்படும். குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றங்கள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து, அந்த அறிக்கையை 4 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களை அதிகாரி மூலம் சுதந்திரமாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கருதுகிறோம். இத்தகைய சூழ்நிலைகளில் இந்த விவகாரத்தை வெறும் நிர்வாக அலட்சியம் அல்லது குறைபாடுள்ள பதிவேடு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியாது. விரிவான விசாரணையை நடத்தி அதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.