47 ஆண்டுக்குப் பின் 1997-ல் கரைக்கப்பட்ட காந்தி அஸ்தியின் ஒரு பகுதி -  பின்னணி என்ன?

47 ஆண்டுக்குப் பின் 1997-ல் கரைக்கப்பட்ட காந்தி அஸ்தியின் ஒரு பகுதி - பின்னணி என்ன?

Published on

புதுடெல்லி: இன்று நாட்டின் தேசத்தந்தையான மகாத்மா காந்தியின் நினைவு நாள். காந்தி அஸ்தியின் ஒரு பகுதி 47 வருடங்களுக்கு பின் 1997-ல் திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டதன் பின்னணி குறித்து பார்ப்போம்.

சுதந்திரப் போராட்டத்தின் முக்கியக் காரணகர்தாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். புதுடெல்லியில் இவர், இந்துத்துவாவாதியான நாதுராம் கோட்சேவின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். ஆனால், மகாத்மா அஸ்தியின் ஒரு பகுதி 47 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது.

இந்த தகவலை இன்று கூட கேட்பவர்களால் நம்ப முடியாததாக உள்ளது. இதற்குப் பின்னால் இருந்த மர்மம் என்ன? அத்தனை ஆண்டுகளாக காந்தியின் அஸ்தி எங்கே வைக்கப்பட்டிருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்போதுதான், திடீரென்று அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் அந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

கோட்சேவால் பலியான காந்தியடிகளின் இறுதிச் சடங்குகள் டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டன. பின்னர் அவரது சாம்பல் கரைக்கப்பட்டது. இருப்பினும், 1990-களில், காந்திஜியின் சாம்பல் தொடர்பான ஒரு ரகசியம் வெளியாகி இருந்தது. அது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மகாத்மா காந்தியின் ஒரு பகுதி அஸ்தி, ஒடிசாவின் சம்பலில் உள்ள ஒரு தேசிய வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது

பின்னர், 47 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சாம்பல் மீண்டும் பிரயாக்ராஜில் உள்ள சங்கமத்தில் உரிய சடங்குகளுடன் கரைக்கப்பட்டது. இந்த அஸ்தி 40 ஆண்டுகளாக ஒரு மரப் பெட்டியில் சம்பலின் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டிருந்தது. ஒடிசாவின் சில செய்தித்தாள்கள் இது குறித்த செய்திகளை அப்போது வெளியிட்டிருந்தன.

இதை யார் செய்தது என்ற கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கு மர்மத்தில் மூழ்கி, ஒடிசா மாநில அரசின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

அந்த சாம்பல் மகாத்மா காந்தியுடையது அல்ல, சுபாஷ் சந்திர போஸுடையது என்றும், அதனால்தான் அது வங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் சில அமைப்புகள் சந்தேகங்களை எழுப்பின.

பிரபல எழுத்தாளர் பீட்டர் பிரெஞ்ச் தனது ’லிபர்ட்டி ஆர் டெத்’ என்ற புத்தகத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் அருண் காந்தி, 1996-இல் ஒடிசா முதல்வர், ஆளுநர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதி, விசாரணையை கோரினார்.

அதில் துஷார், ‘காந்திஜியின் அஸ்தி கட்டாக்கில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கியில் ஒரு லாக்கரில் வைக்கப்பட்டிருப்பதான செய்தி மிகவும் வருத்தத்துக்கு உரியது. ஏனெனில், இந்து நம்பிக்கைகளின்படி, இறந்தவரின் அஸ்தி நதிகளில் கரைக்கப்படும் வரை அவரது ஆன்மா அமைதி அடைவதில்லை. இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், தனக்குத் தெரிவிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

ஒடிசா ஆளுநரோ அல்லது முதல்வரோ துஷாரின் கடிதத்துக்கு பதிலளிக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர், துஷார் காந்தியைத் தொலைபேசியில் அழைத்தார். ’காந்திஜியின் அஸ்தி ஸ்டேட் வங்கியின் லாக்கரில் இருக்கிறது. அவை கட்டாக்கில் உள்ள வங்கியின் லாக்கரில் ஒரு மரப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பெட்டியில் 'மகாத்மா காந்தியின் அஸ்தி' என்று எழுதப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

பின்னர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் 08 மார்ச் 1996 அன்று துஷாருக்கு அதிகாரப்பூர்வ கடிதத்தையும் அனுப்பினார். அதில், 29 நவம்பர் 1950 அன்று, ஒடிசா முதல்வரின் செயலாளர் 18 அங்குலம் நீளம் மற்றும் 20 அங்குலம் அகலம் கொண்ட ஒரு பெட்டியை வங்கி லாக்கரில் வைத்தார். அதற்கு ஈடாக, வங்கி அவருக்கு 29 நவம்பர் 1950 அன்று 30/21 என்ற பாதுகாப்பு வைப்பு ரசீதை வழங்கியது.

லாக்கரை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்த வங்கி, டிசம்பர் 1994-இல், ஒடிசா முதல்வருக்கு கடிதம் எழுயது. அதில், லாக்கரை திரும்பப் பெறுமாறு கோரியது. ஆனால் எந்தப் பதிலும் அரசு அளிக்கவில்லை. அந்தப் பெட்டி ஒடிசா அரசால் வைக்கப்பட்டதால், அந்த மரப் பெட்டியை என்ன செய்வது என வங்கியும் விழிபிதுங்கியது.

பதில் தராத ஒடிசா அரசு

வங்கியிடமிருந்து கடிதத்தைப் பெற்ற பிறகு, துஷார் அப்போதைய ஒடிசா முதல்வர் ஜே.பி. பட்நாயக், ஆளுநர் ஜி.ராமானுஜம் மற்றும் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மற்றொரு கடிதம் அனுப்பினார். அதில், காந்திஜியின் அஸ்தியைப் பெற்று, இந்து மத முறைப்படி அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய உதவுமாறு கோரினார். இந்த முறையும் அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

<div class="paragraphs"><p>துஷார் காந்தி</p></div>

துஷார் காந்தி

கைவிரித்த ஒடிசா முதல்வர்

பின்னர், 21 மார்ச் 1996 அன்று, துஷார் தனிப்பட்ட முறையில் புவனேஸ்வருக்குச் சென்று அப்போதைய ஒடிசா முதல்வர் ஜே.பி. பட்நாயக்கை சந்தித்தார். இது வெறும் வதந்தி என்றும், இதை நம்பக் கூடாது என்றும் முதல்வர் கூறினார். மேலும், 1950-ல் ஒடிசாவின் முதல்வராக இருந்தவர் நவகிருஷ்ண சவுத்ரி என்றும், அவருக்குச் செயலாளர் இல்லை என்றும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி, இது குறித்த எந்தப் பதிவும் அரசிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.

சிபிஐ விசாரணை

இந்த வதந்தி மீது, தான் ஒரு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப் போவதாகவும், அதில் அந்த அஸ்திக்கு ரசாயனப் பகுப்பாய்வு செய்யப்படும் என்றும் பட்நாயக் கூறினார். அது காந்தியுடையதா இல்லையா என்பது அதன் மூலம் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வங்கியே தவறான அறிக்கைகளை வெளியிடுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

வங்கிக்கு ஒடிசா அரசின் கடிதம்

இதற்குப் பின், 1996-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி, ஒடிசா அரசாங்கத்தின் செயலாளர், புவனேஷ்வரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொது மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மகாத்மா காந்தியின் அஸ்தி இருப்பதாகக் கூறப்படும் இந்த லாக்கரில் உள்ள பெட்டிக்கு மாநில அரசு பொறுப்பேற்காது எனக் குறிப்பிட்டார்.

துஷார் உண்ணாவிரதம்

எனவே, அந்தப் பெட்டியை வங்கி தனது விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றும் அக்கடிதம் குறிப்பிட்டது. இதை எதிர்த்து துஷார் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக, பின் வாங்கிய ஒடிசா அரசு, பல அமைப்புகள் இந்த வழக்கில் இணைந்திருந்ததால், நீதிமன்றத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறி விட்டது.

தொடரும் மர்மம்

இச்சூழலில் மகாத்மா காந்தியின் அஸ்தி அடங்கிய பெட்டியை காந்தியின் கொள்ளுப் பேரனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. இதன்படி, துஷார் அந்த அஸ்தியை மீட்டு, ஜனவரி 30,1997-இல் பிரயாக்ராஜ் சென்று திரிவேணி சங்கமத்தில் முறைப்படிக் கரைத்தார். எனினும், இது ஒடிசாவின் வங்கியிடம் சென்றது மர்மமாகவே இருப்பதாகக் கருதப்படுகிறது.

47 ஆண்டுக்குப் பின் 1997-ல் கரைக்கப்பட்ட காந்தி அஸ்தியின் ஒரு பகுதி -  பின்னணி என்ன?
விமானி செய்த தவறே விபத்துக்கு காரணம்: புலனாய்வு அமைப்பின் முதற்கட்ட விசாரணையில் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in