

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று தொண்டர் ஒருவரின் ஸ்கூட்டரில் பயணித்தபடி இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார். படம்: பிடிஐ
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அங்கு 142 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின்றன.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. குறிப்பாக திரிணமூல் - பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.60 கோடி பேர் வாக்குரிமை பெற்று உள்ளனர். அவர்களுக்காக 44,376 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குரிமையை செலுத்தினர்.
93.19 சதவீத வாக்குப்பதிவு: கடந்த கால மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதை தடுக்க மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 2.4 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களோடு மாநில போலீஸாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். முதல்கட்டத் தேர்தலில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், மீதம் உள்ள 142 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகள் கொல்கத்தா வடக்கு, கொல்கத்தா தெற்கு, ஹவுரா, நாடியா, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மற்றும் புர்தா பர்தாமன் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ளது.
தலைவர்கள் தீவிர பிரச்சாரம்: இந்நிலையில் இங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மம்தா பானர்ஜி தனது சொந்த தொகுதியான பவானிப்பூரில் நடைப்பயணம் மேற்கொண்டும், ஸ்கூட்டரில் பயணம் செய்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ரானாகாட், ஹூக்ளி, அராம்பாஷ், மகேஷ்தலா ஆகிய இடங்களில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
பிரதமர் மோடி ஜகத்தால் பகுதியில் ஜிலேபி மத் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பரக்பூரில் நேற்று காரில் பேரணி சென்று பிரச்சாரம் செய்தார். மத்திய அமைச்சர் அமித்ஷா பெஹலா தானா முதல் மான்டன் வரையும், அதன் பிறகு ஹூக்ளியிலும் சாலைப் பேரணி சென்றார். மாலை 6 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.
மாநிலத்தில் உள்ள 142 தொகுதிகளுக்கும் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ஆணையத்திடம் 800 புகார்கள்: முதல் கட்ட வாக்குப்பதிவின்போது வன்முறை சம்பவங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் 700-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டன. வாக்காளர்களைத் தாக்கியது, கட்சி சார்பில் அமைக்கப்பட்ட பந்தல்களை உடைத்தது தொடர்பாக சிஆர்பிஎப் போலீஸாருக்கு எதிராக 100 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இவற்றை கருத்தில் கொண்டு, தற்போது இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் முடிந்ததும் மாலை தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின்றன.