

புதுடெல்லி: வெளிநாட்டு பங்களிப்பு (முறைப்படுத்துதல்) சட்டத் திருத்த மசோதா 2026-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் வாயில் முன்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை விவாதத்துக்கு கொண்டு வர உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த மசோதா குறித்து காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் கூறுகையில், ‘‘எஃப்சிஆர்ஏ மசோதா கொடூரமான சட்டம். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். சிறுபான்மையினர் மட்டுமின்றி, சமூகப் பணியாற்றும் பல்வேறு அமைப்புகளின் நலன்களையும் இது முடக்கும். எனவே, இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டிப்பதோடு, அதைத் திரும்பப் பெறவும் வலியுறுத்துகிறோம்’’ என்றார்.
காங்கிரஸ் எம்.பி. தரம்வீர் காந்தி கூறுகையில், ‘‘அரசின் முடிவுகள் பாரபட்சமற்றதாகவும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிப்பதாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறிவைப்பதாக அமையக் கூடாது” என்றார்.
புரட்சிகர சோசலிச கட்சி எம்.பி. பிரேமச்சந்திரன் கூறுகையில், ‘‘இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியது மட்டுமல்ல. சிறுபான்மையினரின் உரிமைகளையும் சலுகைகளையும் பறிக்கும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த மசோதா உள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளிக்கையில், ‘‘இந்த மசோதா எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், இந்தியாவில் பெறப்படும் வெளிநாட்டு நிதியுதவிகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.