டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டம்: பிரதமர் மோடி ஆலோசனை

ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை
டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டம்: பிரதமர் மோடி ஆலோசனை
Updated on
2 min read

புதுடெல்லி: ஈ​ரான் - அமெரிக்க, இஸ்​ரேல் போரால் மேற்​காசி​யா​வில் பதற்​றம் தொடரும் நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று இரவு பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கவுன்​சில் (சிசிஎஸ்) ஆலோ​சனை நடத்​தி​யது. ஈரான் போரால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியை சமாளிக்க எடுக்​கப்பட வேண்​டிய நடவடிக்​கைகள் குறித்து இந்​தக் கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​டது.

அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து ஈரானுக்கு எதி​ராக கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போரைத் தொடங்​கின. இந்​தப் போரில் ஈரான் நாட்​டின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உள்​ளிட்ட பல்​வேறு முக்​கிய தலை​வர்​கள் உயி​ரிழந்​தனர்.

இதையடுத்​து, ஈரான் கடும் பதிலடியை கொடுக்​கத் தொடங்​கியது. வளை​குடா நாடு​களில் அமைந்​துள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் கடும் தாக்​குதலை நடத்​தி​யது. கடந்த ஒரு மாதத்​துக்​கும் மேலாக போர் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறி​வைத்து ஈரான் தாக்​குதல்​களை நடத்​து​வ​தால் கச்சா எண்​ணெய்யை மற்ற நாடு​களுக்கு அனுப்​புவ​தில் கடும் சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. மேலும், எண்​ணெய் கப்​பல்​கள் செல்​லும் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் முற்​றி​லும் முடக்​கி​யுள்​ளது. இதனால், சர்​வ​தேச அளவில் எரிபொருள் தட்​டுப்​பாடு அதி​கரித்​துள்​ளது.

இந்​நிலை​யில், பாது​காப்​புக்​கான மத்​திய அமைச்​சர​வைக் குழு கூட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று இரவு 7 மணிக்கு டெல்​லி​யில் நடை​பெற்​றது.

டெல்​லி​யில் பிரதமரின் அதி​காரப்​பூர்வ அலு​வல​கத்​தில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

மேலும், பொருளா​தா​ரம் மற்​றும் உள்​கட்​டமைப்​புத் துறை​களைக் கையாளும் பல மூத்த அமைச்​சர்​களும் இந்த கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர். மேற்​காசி​யா​வில் தொடரும் போர், அதனால் இந்​தி​யா​வில் ஏற்​பட்​டுள்ள தாக்​கங்​கள், நாடு சந்​தித்து வரும் பிரச்​சினை​கள், அதற்​கான தீர்​வு​கள் உள்​ளிட்​டவை குறித்து இந்​தக் கூட்​டத்​தில் அமைச்​சர்​களு​டன் பிரதமர் மோடி விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார்.

மேலும், ஈரான் போரால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியைச் சமாளிக்க எடுக்க வேண்​டிய உடனடி நடவடிக்​கைகள் குறித்து தீவிர​மாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. குறிப்​பாக நாட்​டில் எரிபொருள் மற்​றும் எல்​பிஜி, பிஎன்ஜி விநி​யோகத்​தின் தொடர்ச்​சியை மதிப்​பிட வேண்​டும் என்​றும், உணவு மற்​றும்

உரங்​களில் பதுக்​கல் மற்​றும் செயற்​கை​யான விலை உயர்​வு​களைத் தடுப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும் கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.

அது​மட்​டுமல்​லாமல் வளை​குடா நாடு​களில் உள்ள இந்​தி​யர்​களை அங்​கிருந்து பாது​காப்​பாக வெளி​யேற்றி இந்​தி​யா​வுக்கு அழைத்து வரு​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் குறித்​தும் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

இதே பிரச்​சினை தொடர்​பாக, இதற்கு முன்பு பாது​காப்​புக்​கான மத்​திய அமைச்​சர​வைக் குழு கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் கடந்த மார்ச் 22-ம் தேதி கூடி ஆலோ​சனை நடத்​தி​யது. இதில், மேற்​காசிய போரால் ஏற்​பட்​டுள்ள உலகளா​விய சூழல் குறித்​தும், இந்​திய அரசின் தொடர்​புடைய அமைச்​சகங்​கள் மற்றும் துறைகள் இதுவரை எடுத்துள்ள தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைச் செயலாளர் விரிவாக விளக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு 7 மணிக்கு தொடங்​கிய கூட்​டம் 9.15 மணிக்கு நிறைவடைந்​தது. மத்​திய பாது​காப்​புக்​கான அமைச்​சர​வைக் கவுன்​சில் கூட்​டத்​தில் நடந்த ஆலோ​சனை தொடர்​பாக செய்​தி​யாளர்​களுக்கு மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் விளக்​கி​னார். செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

மேற்​காசி​யா​வில் நடந்து வரும் போரின் காரண​மாக பல்​வேறு தாக்​கங்​கள் நிகழ்ந்து வரு​கின்​றன. இதை இந்​தியா ராஜதந்​திர ரீதி​யாக அணுகி வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் ராஜதந்​திர ரீதி​யாக நாங்​கள் பரந்த சர்​வ​தேச சமூகத்​துடன் தொடர்ந்து தொடர்​பில் இருந்து வரு​கிறோம்.

மேற்​காசிய போர் தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி, நெதர்​லாந்து பிரதமர் ராப் ஜெட்​டனைத் தொடர்பு கொண்டு பேசி​னார். அப்​போது, இரு​நாட்டு உறவு​களை மேலும் வலுப்​படுத்​து​வதற்​கான வழிகள் குறித்து 2 நாட்டு தலை​வர்​களும் நீண்ட ஆலோ​சனையை நடத்​தினர்.

அதே நேரத்​தில், மேற்கு ஆசி​யா​வின் நிலைமை குறித்​தும் அவர்​கள் கருத்​துக்​களைப் பரி​மாறிக் கொண்​டனர், மேலும் அப்​பகு​தி​யில் அமைதி மற்​றும் ஸ்திரத்​தன்​மையை விரை​வில் மீட்​டெடுக்க வேண்​டியதன் அவசி​யத்​தை​யும் 2 நாட்​டுத் தலை​வர்​களும் வலி​யுறுத்​தினர்.

மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர், போர்ச்​சுகல் நாட்​டின் வெளி​யுறவு அமைச்​சர் பாலோ ரங்​கலுடன் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது, மேற்​காசி​யா​வில் நடந்து வரும் மோதல் குறித்து கருத்​துக்​களைப் பரி​மாறிக் கொண்​டனர்.

இந்தியர்கள் பாதுகாப்பு: இது​வரை, ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் உள்ள நமது தூதரகம் 1,171 இந்​தி​யர்​களை தொடர்பு கொண்டு அவர்​கள் பாது​காப்​பாக இந்​தியா திரும்​புதவற்​கான ஏற்​பாடு​களைச் செய்​துள்​ளது.

இதில், 818 இந்​திய மாணவர்​கள் தரைவழி எல்லை வழி​யாக ஈரானை விட்டு ஆர்​மீனியா மற்​றும் அஜர்​பைஜான் வழி​யாக வெளி​யேறு​வதும் அடங்​கும். இவ்​வாறு வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர்​ ஜெய்​ஸ்​வால்​ தெரிவித்​தார்​.

டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டம்: பிரதமர் மோடி ஆலோசனை
ரிஸ்வி, ஸ்டப்ஸ் அபார கூட்டணி: 6 விக்கெட்டுகளில் லக்னோவை வீழ்த்தியது டெல்லி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in