

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராம் (எ) நந்து மோங்கே காவடே. இவருக்கு 17 வயதாக இருக்கும் போது குடும்பச் சண்டையின் காரணமாக காவடேவை, அவரது தந்தை மோங்கே காவடே திட்டிவிட்டார். இதனால் கோபம் கொண்டு வீட்டை விட்டுச் சென்ற ஜெயராம் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகத் தெரியவந்தது.
சுமார் 14 ஆண்டுகளாக அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது தந்தை மோங்கே காவடே உருக்கமாக வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அதில் மோங்கே காவடே கூறும்போது, “நாடு முழுவதும் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து, நக்சல்கள் வெளியேறி நாட்டு பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். நீயும் ஆயுதங்களைப் போட்டுவிட்டு போலீஸாரிடம் சரணடைய வேண்டும்.
உன்னுடைய குழுவில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். நீ வீட்டுக்குத் திரும்பி உனது மக்களுடன் மக்களாக வாழ வேண்டும். இப்போது, உன்னுடைய மாவோயிஸ்ட் குழுவில் இருந்த உங்கள் மூத்த தோழர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். ஏன் நீ மட்டும் காட்டில் தனியாக இத்தகைய இன்னல்களைத் தாங்கிக்கொண்டு இருக்கிறாய்? நீ உடனடியாக கிராமத்துக்குத் திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
காட்சிரோலி மாவட்டத்திலுள்ள மாவோயிஸ்ட் குழுவில் ஜெயராம் உட்பட 6 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரண் அடைந்தால் அவர்கள் மறுவாழ்வுக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசு வழங்கும் என்று மகாராஷ்டிர போலீஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நக்சல்கள் இல்லாத மாநிலமாக மகாராஷ்டிராவை மத்திய அரசு அறிவித்துள்ளது.