

மும்பை: மகாராஷ்டிராவில் கட்சிரோலி பகுதி ஒரு காலத்தில் நக்சலைட் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டது. இங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்தனர். அரசின் ஆதரவை பெறுவது அவர்களுக்கு கடினமாக இருந்தது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை காரணமாக இப்பகுதி இடதுசாரி தீவிரவாதத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது.
இதுவரை கட்சிரோலி பகுதிக்கு அறிமுகமில்லாத ஸ்ட்ராபெர்ரியின் விளைச்சல் இந்த ஆண்டு அதிக லாபத்தை தந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கட்சிரோலியில் உள்ள முல்சேரா, மலைப்பாங்கான நிலப்பரப்பை கொண்டுள்ளது. இது, ஸ்ட்ராபெர்ரி விளைச்சலுக்குப் பெயர் பெற்ற மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான மகாபலேஷ்வர் காலநிலையை கொண்டுள்ளது.
நக்சலைட் ஆதிக்கத்தில் இருந்து மீண்டும் வரும் கட்சிரோலி விவசாயிகளுக்கு உதவுவதற்காக மாவட்ட வேளாண்மை துறையால் ஒரு பரிசோதனை முயற்சியாக இங்கு ஸ்ட்ராபெர்ரி சாகுபடி தொடங்கப்பட்டது. இன்று அது லாபகரமான பயிராக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து தாலுகா வேளாண்மை அதிகாரி விகாஸ் பாட் டீல் கூறுகையில், “கடந்த 2019-ல் எங்களுக்கு இந்த யோசனை முதலில் தோன்றியது.
இங்கு வெப்பநிலை சற்று கூடுதலாக இருந்ததால் வெப்பத்தை தாங்கக் கூடிய வகையை தேர்ந்தெடுத்தோம். விவசாயிகளை சோதனை அடிப்படையில் ஸ்ட்ராபெர்ரி பயிரிட ஊக்குவித்தோம். இதில் இங்கு ஸ்ட்ராபெர்ரி பயிரிட முடியும் என்பதை உணர்ந்தோம். மகாராஷ்டிர அரசின் ஆதரவால் நாங்கள் நிலைமையை மாற்றியுள்ளோம், இப்பகுதி விவசாயிகள் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். மற்ற பயிர்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகம்" என்றார்.
மாற்றத்தை ஏற்படுத்தும்
கட்சிரோலியில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்பிய தருணமும் விவசாயிகளுக்கு ஸ்ட்ராபெர்ரி லாபமும் ஒருசேர நிகழ்ந்துள்ளது. இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள விவசாயிகள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே வகுத்துக் கொள்கின்றனர். அரசு நலத்திட்டங்கள் பயனாளிகளை சென்றடைந்து கட்சிரோலி செழிக்க வேண்டும் என்பதில் மாநில அரசும் உறுதியாக உள்ளது.