

நடிகர் ஜெயராம்
திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் கதவுகள் மற்றும் பீடத்துடன் கூடிய 2 துவாரபாலகர் சிலைகளுக்கு கடந்த 1999-ம் ஆண்டு தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டன. கடந்த 2019-ம் ஆண்டில் துவார பாலகர் சிலைகள், கருவறை கதவுகளை தனது சொந்த செலவில் புதுப்பிக்க முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போத்தி முன்வந்தார். இதன்படி சென்னையில் உள்ள நிறுவனத்தில் துவார பாலகர் சிலைகள், கருவறை கதவுகளுக்கு மீண்டும் தங்க முலாம் பூசப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டில் சிலைகள், கதவுகள் தேவசம் போர்டிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சூழலில் கடந்த ஆண்டு செப்டம்பரில் துவாரபாலகர் சிலைகள், கதவுகளில் 4.5 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அந்த மாநில காவல் துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்கு சென்னையில் தங்க மூலாம் பூசியபோது சென்னை அசோக் நகரில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டுக்கு அவை எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதுதொடர்பாக நடிகர் ஜெயராமிடம் கேரள சிறப்பு புலனாய்வு குழு அண்மையில் விசாரணை நடத்தியது.
இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை சார்பில் நடிகர் ஜெயராமுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அடுத்த சில நாட்களில் அவர் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போத்தி அண்மையில் ஜாமீனில் விடுதலையானார். அமலாக்கத் துறை சார்பில் அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அடுத்த சில நாட்களில் அவர் கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.