

திருவனந்தபுரம்: கேரளத்தில் முதல்முறை வாக்காளர்களை கவர அல்வா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புதுமையான முயற்சியால் முதல்முறை வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளத்தில் வரும் 9-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களை கவர அவர்களுக்கு அல்வா வழங்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் இதற்கான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
இதன்படி கேரளத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அல்வா பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் முதல்முறை வாக்காளர்களுக்கு அல்வா பாக்கெட்களை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முதல்முறை வாக்காளர்கள் யார் என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரியும்(டிஇஓ), வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளும்(பிஎல்ஓ) கண்டறிந்து இதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
இதற்காக கூடுதல் தன்னார்வலர்களையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புதுமையான முயற்சியால் முதல்முறை வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.