பேரவைத் தேர்தல் 2026: அசாமில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

பாஜகவின் செல்வாக்கை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்கிறது
பேரவைத் தேர்தல் 2026: அசாமில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
Updated on
3 min read

இந்த ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்களின் கணக்கு அசாம், கேரளம், புதுச்சேரியிலிருந்து தொடங்குகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக இந்த மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

அசாம் தேர்தலைப் பொறுத்தவரை, வெற்றி பெற ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ‘அசோம் சோன்மிலிட்டோ மோர்ச்சா’ கூட்டணியும் முனைப்புக் காட்டுகின்றன.

2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பதுருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எஃப்.), இந்த முறை அசதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கைகோத்திருக்கிறது.

வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, மத அடிப்படையிலான பிளவுகள், அசாமிய அடையாளத்தைப் பாதுகாத்தல் எனப் பல்வேறு அம்சங்கள் இந்தத் தேர்தலின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது.

பாஜகவின் பலம்

2014 மக்களவைத் தேர்தலில், அசாமில் மொத்தம் உள்ள 14 தொகுதி​களில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 8ஐக் கைப்பற்றியது முதல் அங்கு பாஜகவின் ஆதிக்கம் தொடங்கியது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி, 2016இல் பாஜக ஆட்சியமைத்தது. சர்வானந்த சோனோவால் முதல்வ​ரானார்.

2021 தேர்தலில், பாஜக கூட்டணி 75 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. இந்த முறை ஹிமந்த பிஸ்வ சர்மா முதல்வ​ரானார். ஒருகாலத்தில் காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்​திரமாகக் கருதப்பட்ட ஹிமந்த, கருத்து வேறுபாடுகள் காரணமாக பாஜகவுக்குத் தாவி, இன்றைக்குப் பெரும் ஆளுமையாக மாறியிருக்​கிறார்.

வளர்ச்சிப் பணிகள், உல்ஃபா அமைப்புடனான அமைதி ஒப்பந்தம், நலத்திட்ட உதவிகள் என ஆக்கபூர்வமான விஷயங்​களுக்காகப் பாராட்​டப்​படு​கிறார் ஹிமந்த.

நீண்டகாலமாக காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துவந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமூகம், நலத்திட்ட உதவிகளால் பாஜக பக்கம் சாய்ந்​திருக்​கிறது.

பழங்குடிப் பிரிவில் வரும் இந்தச் சமூகத்​தினர், அசாம் வாக்காளர்களில் 20% வரை உள்ளனர் என்பது கவனிக்​கத்​தக்கது. மறுபுறம், முஸ்லிம்​களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்​காகவும் ஹிமந்த பேசப்படு​கிறார்.

சர்ச்சைகள்

மக்கள்​தொகையில் முஸ்லிம்கள் 34%க்கும் அதிகமாக உள்ள அசாமில், சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பான பிரச்சினை எப்போதுமே முதன்மை இடம் வகிக்கிறது.

வங்கதேசத்​திலிருந்து வந்தவர்​களாகக் கருதப்​படு​பவர்களை மியா முஸ்லிம்கள் எனச் சுட்டும் ஹிமந்த, அவர்களை வெளியேற்று​வதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு​வரு​கிறார்.

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கதேச மியாக்களின் முதுகெலும்பு உடைக்கப்படும் என்றும் எச்சரித்​திருக்​கிறார். வங்கதேச முஸ்லிம்கள் வசம் இருந்த 1.25 லட்சம் ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டிருப்பதாக பாஜக அரசு கூறிவரு​கிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆக்கிரமிப்பு நிலங்களே இருக்காது என்றும் ஹிமந்த கூறியிருக்​கிறார். பொது சிவில் சட்டம், குடியேறிகள் (அசாமிலிருந்து வெளியேற்றுதல்) சட்டம் (1950), ‘லவ் ஜிகா’துக்கு முடிவு​கட்டும் சட்டம் போன்ற வாக்குறு​தி​களையும் பாஜக முன்வைத்​திருக்​கிறது.

அதேவேளையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அசாம் கண பரிஷத் சார்பில் போட்டி​யிடும் 26 வேட்பாளர்களில் 13 பேர் முஸ்லிம்கள் என்பது இந்தத் தேர்தலின் விநோதம். இவர்களில் பலர் பதுருதீன் அஜ்மல் தலைமையிலான ஏ.ஐ.யூ.டி.எஃப். கட்சியி​லிருந்து வந்தவர்கள்.

மியாக்கள், சட்டவிரோதக் குடியேற்றம் என்றெல்லாம் பேசும் பாஜக, வாக்குகளைப் பெறுவதற்காகச் சமரசம் செய்து​கொள்வதாக சட்டவிரோதக் குடியேற்றத்தை எதிர்க்கும் அமைப்புகள் விமரிசித்திருக்​கின்றன.

இருப்பினும், குறைந்த வருவாய் கொண்ட குடும்​பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அருணோதய் திட்டத்தின் மூலம், மாதம் ரூ.1,250 வழங்கிவரும் பாஜக அரசு, அதை ரூ.3,000 ஆக உயர்த்​தப்​போவதாக வாக்குறுதி அளித்திருப்பது இந்தத் தேர்தலின் முக்கிய அம்சங்களில் ஒன்று.

தொகுதி மறுவரையறை

2023இல் அசாமில் தொகுதி மறுவரையறை செய்யப்​பட்டது பாஜகவுக்குப் பெரும் ஆதாயம் சேர்க்கும் என எதிர்பார்க்​கப்​படு​கிறது. இந்த மாற்றத்​துக்குப் பின்னரும் அசாம் சட்டமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை126ஆகவே தொடர்கிறது.

எனினும், தொகுதிகளின் எல்லைகள், பெயர்கள், இடஒதுக்கீடு நிலைகளில் குறிப்​பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்​பட்​டுள்ளன. மிக முக்கியமாக, தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் முஸ்லிம்கள் பெரும்​பான்மையாக இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை 29இலிருந்து 22ஆகக் குறைந்துள்ளது.

முஸ்லிம்களின் வாக்குகளைக் குறிவைத்து போட்டி​யிட்டுவந்த பல வேட்பாளர்கள் வேறு தொகுதிக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்​டிருக்​கிறது. பழங்குடியின மக்கள் பெரும்​பான்மையாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்​து உள்ளது. இது பாஜகவின் வெற்றி சதவீதத்தை அதிகரிக்கும் எனக் கணிக்கப்​படு​கிறது.

காங்கிரஸின் நிலை

காங்கிரஸைப் பொறுத்தவரை, அசாம் மாநிலக் காங்கிரஸ் தலைவர் கெளரவ் கோகோயின் செயல்பாடுகள் காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்​தி​யிருக்​கின்றன. புபேன் போரா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் பாஜகவுக்குத் தாவியது காங்கிரஸின் பின்னடைவாகப் பார்க்​கப்​படு​கிறது.

செல்வாக்கான தலைவராக இருந்த தருண் கோகோய் (கெளரவின் தந்தை), 2020இல் மறைந்துவிட்ட பின்னர், முதல்வர் முகம் இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறியிருக்​கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டமும் (சிஏஏ), தேசியக் குடிமக்கள் பதிவேடும் (என்ஆர்சி) அசாமின் மிக முக்கியமான பிரச்சினைகள்.

2021 தேர்தலில், ஏ.ஐ.யூ.டி.எஃப். கட்சியுடன் கைகோப்பது காங்கிரஸின் முக்கியமான நகர்வாகப் பார்க்​கப்​பட்டது. எனினும், கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றும் காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியவில்லை. தருண் கோகோய் முதல்வராக இருந்த வரையில், பதுருதீன் அஜ்மலின் கட்சியுடன் இணைய காங்கிரஸ் முன்வர​வில்லை.

இந்து சமூகத்தின் வாக்குகளைப் பெறுவது சிரமம் என்று அப்போது கருதப்​பட்டது. இந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணியும் முறிந்து​விட்டது. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை கெளரவ் எளிதாக விட்டுக்​கொடுத்து​விட்டார் என்று பதுருதீன் சாடிவரு​கிறார்.

முஸ்லிம்கள் - குறிப்பாக வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் ஏ.ஐ.யூ.டி.எஃப் கட்சிக்​குத்தான் வாக்களிப்​பார்கள் என்பதால் கணிசமான வாக்குகளைக் காங்கிரஸ் இழக்கும் எனப் பேசப்படு​கிறது.

அதேவேளையில், காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பெண்ணுக்கும் தொழில் தொடங்கு​வதற்காக ரூ.50,000 ‘நிபந்​தனையற்ற’ நிதியுதவியையும், ஒவ்வொரு குடும்பத்​துக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீட்​டையும் வழங்கும் என்று அக்கட்சி உறுதியளித்​துள்ளது.

ஆண்டுப் பட்டா என்கிற முறையில் தற்காலிக நிலப் பட்டா பூர்வகுடிகளுக்கு வழங்கப்​பட்டுவரும் நிலையில், 10 லட்சம் பேருக்கு நிரந்தரப் பட்டா வழங்கப்படும் எனக் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்​கிறது. மூத்த குடிமக்​களுக்கு மாதம் ரூ.1,250 வழங்கப்படும் என்பதும் காங்கிரஸின் முக்கியமான வாக்குறுதி.

அசாம் மக்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்ற பாடகர் ஜுபீன் கர்க் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய​வர்களைப் பாதுகாப்​ப​திலும் வழக்கைத் தாமதப்​படுத்து​வ​திலும் பாஜக அரசு ஈடுபட்​டிருப்பதாக எதிர்க்​கட்சிகள் குற்றம்​சாட்டு​கின்றன. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்​படும்’ எனக் காங்கிரஸ் அளித்திருக்கும் வாக்குறுதி பரபரப்பைக் கிளப்பி​யிருக்​கிறது.

எனினும், நீதி மன்றப் பணிகளில் குறுக்​கிட்டு, எப்படி குறிப்பிட்ட நாள்களில் நீதியைப் பெற்றுத் தர முடியும் என்று ஹிமந்த கேள்வி எழுப்பி​யிருக்​கிறார்.

எல்லாவற்​றையும் தாண்டி, கட்சிக்​குள்ளும் கூட்டணிக் கட்சிகளுடனும் கெளரவ் நட்பார்ந்த முறையில் நடந்து​கொள்ள​வில்லை என்கிற விமர்சனம் காங்கிரஸுக்குப் பின்னடைவாகப் பார்க்​கப்​படு​கிறது.

2021 தேர்தல் தோல்விக்குப் பின்னர், “பாஜகவின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்து காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை” என்று அசாம் காங்கிரஸின் அப்போதைய தலைவர் ரிபுன் போரா ஆதங்கத்துடன் கூறியிருந்தார். இந்த முறையும் அதுதான் நடக்குமா அல்லது காங்கிரஸ் நிலைமை மாறுமா எனப் பார்ப்போம்!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

பேரவைத் தேர்தல் 2026: அசாமில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
சுந்தர்.சி என்ட்ரி... பிடிஆருக்கு டஃப்? - மதுரை மத்திய தொகுதி களம் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in