

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை, முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் (சரத் பவார்) தலைவருமான சரத் பவார் சந்தித்துப் பேசியுள்ளார். இது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இண்டியா கூட்டணியில் உள்ள உத்தவ் சிவசேனா அணியைச் சேர்ந்த 9 மக்களவை எம்.பி.க்களில் 6 பேர், பாஜக கூட்டணியில் உள்ள துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர்.
நாடு முழுவதும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தன் வசத்துக்கு பாஜக இழுத்து வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி.க்கள், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் ஆகியோர் தத்தமது கட்சிகளை உடைத்து பாஜகவுக்குத் தாவியுள்ளனர். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், இந்திய குடிமக்கள் கட்சியில் இணைந்து பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
தற்போது அதே பாணியில் மகாராஷ்டிராவில் சிவசேனாவின் பெரும்பான்மை எம்.பி.க்களை இழுத்துள்ள நிலையில் அடுத்து சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு பாஜக இலக்கு வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், மறைந்த அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அஜித் பவார் இறந்த பின்னர், அவரது மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் தான் தனது எதிரணியில் இருந்து எம்பி.க்களை லாவகமாக இழுத்துள்ள ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேரில் சென்று சந்தித்துப் பேசினார். ஏக்நாத் ஷிண்டேவின் அலுவலகமான விதான் பவனில் இருவரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இருவரும் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு காரணமாக, சரத் பவார் தலைமையிலான அணியும் பாஜக கூட்டணி வசம் செல்லக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக சரத் பவார் தலைமையிலான கட்சி இதற்கு மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை. இதனால் மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இதனால் பவார் கூட்டணியிலுள்ள சிவசேனா(உத்தவ்), காங்கிரஸ் கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன.
இது குறித்து சிவசேனா (உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் கூறும்போது, “பவார்-ஷிண்டே சந்திப்பால் பல ஊகங்கள் எழுந்துள்ளன. மேலும் இது பவார் கட்சி மீது வைத்துள்ள நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. கட்சித் தலைவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை கீழே இறக்கியுள்ளது” என்றார்.