

கோவை: கோவையில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ‘போலீஸ்’ கார்த்தியை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவருக்கு பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான தனசேகர்(53) என்பவரை, கடந்த 5-ம் தேதி மர்ம நபர்கள் கடத்தி, ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டினர். பின்னர், ஆள்மாற்றி கடத்தியது தெரியவந்ததால் அவரை பாலக்காடு சாலையில் இறக்கிவிட்டுச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கரூரைச் சேர்ந்த வைரபெருமாள்(30) என்பவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், ‘போலீஸ்’ கார்த்தி, திருச்சி மூர்த்தி, அன்பு, திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதில் முக்கிய குற்றவாளியான ‘போலீஸ்’ கார்த்தி குறித்து போலீஸார் கூறியதாவது:
மோசடி புகாரில் பணிநீக்கம்: கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த இடிகரையைச் சேர்ந்தவர் கார்த்தி. கடந்த 2003-ம் ஆண்டு காவலராகப் பணியில் சேர்ந்த இவர், பெண்ணிடம் நகையைப் பறித்து மோசடி செய்த புகாரில் சிக்கியதால், 2005-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார். இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மற்ற குற்றவாளிகளுடன் பழக்கமாகி சிறு, சிறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.
2011-ம் ஆண்டு பீளமேட்டில் உள்ள இரண்டாம் ரக கார் விற்பனையகத்தில், பூட்டை உடைத்து காரை திருடிச் சென்ற வழக்கு, 2016-ல் சரவணம்பட்டியில் கல்லூரி மாணவரைத் தாக்கி, மிரட்டிய வழக்கு, 2021-ம் ஆண்டு கார் விற்பனை தொடர்பான தொழில் போட்டியில் போத்தனூரில் ஒருவரைக் கொலை செய்த வழக்கு உள்ளிட்டபல வழக்குகள் இவர் மீது உள்ளன.
இந்நிலையில், பணத்துக்காககாங்கிரஸ் பிரமுகரை சமீபத்தில் கடத்தியுள்ளார். ஒவ்வொரு முறையும் போலீஸார் நெருங்கும்போது, சாதுர்யமாகத் தப்பித்து விடுகிறார். இந்த வழக்கில் கார்த்தியையும், மற்றவர்களையும் தீவிரமாகத் தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.