உ.பி., மே.வ., உத்தராகண்ட்டின் 12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ல் தேர்தல்

தேர்தல் ஆணையம் அறிவிப்பு
உ.பி., மே.வ., உத்தராகண்ட்டின் 12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ல் தேர்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் 12 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 25-ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையும் உத்தரப் பிரதேசத்தின் 10 இடங்கள், உத்தராகண்ட்டின் ஓர் இடம், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள ஓர் இடம் என மொத்தம் 12 இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான அறிவிக்கை செப்.29-ம் தேதி வெளியிடப்படும் என்றும், அக்டோபர் 6-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், அக்டோபர் 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்பிக்கள் அருண் சிங், கீதா சக்யா, நீரஜ் சேகர், பிரிஜ்லால், பி.எல். வர்மா, சீமா திவேதி, ஹர்தீப் சிங் பூரி ஆகியோரின் பதவிக்காலம் நவ.25-ம் தேதியோடு நிறைவடைகிறது.

இதேபோல், உத்தரப் பிரதேச சமாஜ்வாதி எம்பி ராம் கோபால் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ராம்ஜி கவுதம் ஆகியோரின் பதவிக்காலமும் நவ.25-ல் முடிவடைகிறது.

உத்தராகண்ட் மாநில பாஜக உறுப்பினர் நரேஷ் பன்சாலின் பதவிக்காலமும் நவ.25-ல் முடிவுக்கு வருகிறது. மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் எம்பியாக இருந்த நடிகை கோயல் மால்லிக், தனது பதவியை ஜூலை 16-ம் தேதி ராஜினமா செய்ததால் அந்த இடத்துக்கும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை பலத்தின் அடிப்படையில், பாஜக தலைமையிலான கூட்டணி 8 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல் முடிவுகளால் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலங்களவையில் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடும். ஏனெனில், அக்கட்சிக்கு உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் யாரும் கிடையாது.

உத்தராகண்ட் மாநிலத்தில் காலியாக உள்ள ஓர் இடத்தையும், மேற்கு வங்கத்தின் ஓர் இடத்தையும் கைப்பற்றும் வலுவுடன் பாஜக இருப்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி., மே.வ., உத்தராகண்ட்டின் 12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ல் தேர்தல்
“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் பெரிய திட்டங்களைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை” - பிரியங்கா காந்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in