“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் பெரிய திட்டங்களைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை” - பிரியங்கா காந்தி

“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் பெரிய திட்டங்களைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை” - பிரியங்கா காந்தி
Updated on
1 min read

வயநாடு: பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் பெரிய திட்டங்களைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் வயநாடு தொகுதி எம்பியான பிரியங்கா காந்தி, கல்பெட்டாவில் உள்ள வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிஹாரின் ஜமுய் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “இது மிகவும் மோசமான ஒன்று. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. கடந்த காலங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தபோதிலும், முன்பைவிட தற்போது நிலைமை மோசமாகி உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. தெருக்களில் கூட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலையில், பெரிய திட்டங்கள் குறித்தும் கொள்கைகள் குறித்தும் பேசுவதில் அர்த்தம் இல்லை.

இது குறித்து நாம் அனைவருமே சிந்திக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக உணர்வதை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து மாநில அரசுகளும், மத்திய அரசும் சிந்திக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

கடந்த 19-ம் தேதி, பிஹாரின் ஜமுய் பகுதியில், பதின்ம வயது பள்ளி சிறுமியும், அவருடன் பயிலும் சக மாணவர் ஒருவரும் பயிற்சி வகுப்பு முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து அந்த சிறுமியை துன்புறுத்தியது. அந்த கும்பலில் இருந்த ஒரு நபர், சிறுமியை தூக்கிக் கொண்டு ஓடும் சம்பவமும் நடந்துள்ளது. அந்த சிறுவனும் சிறுமியும் மிகுந்த அச்சமடைந்து அந்த கும்பலிடம் வேண்டி கேட்டுக்கொண்டதை அடுத்து அந்தக் கும்பல் அவர்களை விடுவித்துள்ளது. இது குறித்த வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன.

இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பிஹார் மாநில காவல்துறையை தேசிய மகளிர் ஆணையமும் வலியுறுத்தியுள்ளது.

“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் பெரிய திட்டங்களைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை” - பிரியங்கா காந்தி
‘வந்தே மாதரம்’ பாடாதவர்கள் மீது குற்ற வழக்கு கூடாது: உச்ச நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in