

புதுடெல்லி: ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் எபோலா பரவி வருவதால் பொது சுகாதார கண்காணிப்பை பலப்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும் டெல்லி சர்வதேச விமான நிலையமும் இணைந்து பயணிகள் சுகாதார சுய அறிவிப்பு போர்டலை அறிமுகப்படுத்தி உள்ளன.
சுகாதார சேவைகள் இயக்குநரகம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஏர் சுவிதா 2.0 என்ற இந்த போர்டல் மூலம், இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், குடியேற்ற அனுமதிக்கு முன்பு, கடந்த 21 நாட்களின் பயணம், தொடர்பு வரலாறு மற்றும் அறிகுறிகள் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த இணைய தளம் விமான நிலைய சுகாதார அதிகாரி, குடியேற்றப் பிரிவு மற்றும் மாநிலக் கண்காணிப்பு அதிகாரிகள் ஆகியோருடன் நிகழ்நேரத் தரவுப் பகிர்வைச் சாத்தியமாக்குகிறது. அதேவேளையில், விமானம் தரையிறங்கிய பிறகு பூர்த்தி செய்ய வேண்டிய காகிதப் படிவங்கள் ஏதுமின்றி, பயணிகளின் வருகை அனுபவத்தைச் சுமுகமாகவும் தொடுதலின்றி மேற்கொள்ளவும், ஆபத்து வாய்ப்புள்ள பயணிகளை விரைவாக அடையாளம் கண்டு பரிந்துரைக்கவும் இது உதவுகிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த படிவத்தை இந்தியா வருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே நிரப்பலாம். பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பே அல்லது வெப் செக்-இன் நேரத்தில் இதை நிரப்ப வேண்டும் என்றும், வந்ததும் அச்சிடப்பட்ட/ டவுன்லோடு செய்யப்பட்ட படிவத்தை காட்டினால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது.