

மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ரூ.1,745 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகின்றன. பொதுவாக சரக்குக் கப்பல், சரக்கு விமானங்கள் மூலம் போதைப் பொருள் மும்பைக்குள் கடத்தப்படுகிறது.
இந்தச் சூழலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் 349 கிலோ கோகைன் போதைப் பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1,745 கோடி. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள், மும்பையில் 349 கிலோ கோகைன் பறிமுதல் செய்து உள்ளனர். சிறிய அளவிலான போதைப் பொருள் கடத்தல்களைத் தொடர்ந்து கண்காணித்து மிகப்பெரிய நெட்வொர்க் கண்டறியப்பட்டு உள்ளது. சர்வதேச போதைப் பொருள் கடத்தலைக் கண்டுபிடித்த என்சிபி குழுவைப் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மும்பை நிழல் உலக தாதாவாக இருந்த தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளார். அவரது நெருங்கிய கூட்டாளி சலீம் டோலா அண்மையில் துருக்கியில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளார். அவரது கைதைத் தொடர்ந்து மும்பையில் மிகப்பெரிய அளவில் கோகைன் கைப்பற்றப்பட்டு இருப்பதாக மகாராஷ்டிர போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து என்சிபி அதிகாரிகள் கூறியதாவது: மும்பையின் பல்வேறு பகுதிகளுக்கு கோகைன் போதைப் பொருளை கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், நவி மும்பையின் கலம்போலி பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தோம். அதில் இருந்து 136 மூட்டைகளில் கோகைன் கைப்பற்றப்பட்டது. இதேபோல, தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள கிடங்கில் 213 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களுக்குள் கோகைன் போதைப் பொருளை மறைத்து வைத்து இந்தியாவுக்குள் கடத்தி வந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உடைய நபர்களை தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.