

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில 2-ம் கட்டத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
டைமண்ட் ஹார்பர் மற்றும் மகரஹட் பஸ்சிம் தொகுதிகளில், வாக்காளர்களின் சட்டைப்பையில் ரகசிய கேமராவை பொருத்தி, அவர்கள் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதைக் கண்காணிக்க முயற்சி நடந்ததாக கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில், 77 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் சிறப்பு பார்வையாளர் சுப்ரதா குப்தா ஆய்வு நடத்தினார். அதன் அடிப்படையில், 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் 2-ம் கட்டத் தேர்தலின்போது மகரஹட் பஸ்சிம், டைமண்ட் ஹார்பர் தொகுதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பார்வையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
அந்த புகார்கள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்துள்ள தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 58(2)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட 15 வாக்குச்சாவடிகளில் ஏப்.29-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மகரஹட் பஸ்சிம் தொகுதியில் 11 வாக்குச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 4 வாக்குச்சாவடிகளிலும் மே 2-ம் தேதி (இன்று) மறு வாக்குப்பதிவு நடத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ளார். மறு வாக்குப்பதிவு 2-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.