

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள யுஎன் மேத்தா இதயவியல் ஆராய்ச்சி மையத்தில் ஒருவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேற்று முன்தினம் திட்டமிடப்பட்டது.
இதற்காக சூரத் நகரில் உறுப்பு தானம் செய்த ஒருவரிடமிருந்து பெற்ற இதயத்தை 250 கி.மீ தூரமுள்ள அகமதாபாத்துக்கு வந்தே பாரத் ரயிலில் விரைவாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து மேத்தா இதயவியல் ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு செல்லவும் சிறப்பு வழித்தடம் உருவாக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளில் மருத்துவக் குழுவினர், ரயில்வே துறையினர், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், குஜராத் போலீஸார் ஆகியோர் ஈடுபட்டனர்.
வழக்கமாக சூரத் நகரில் இருந்து காலை 8.58 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், அகமதாபாத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்தடையும். ஆனால் நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயில் 2 மணி நேரத்தில் 250 கி.மீ பயணம் செய்து அகமதாபாத் சென்றது. அகமதாபாத் ரயில்நிலையத்தில் முதல் நடைமேடையிலிருந்து தானம் பெறப்பட்ட இதயம் உடனடியாக யுஎன் மேத்தா இதயவியல் ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தானமாகப் பெறப்பட்ட இதயம் ஒன்று சூரத்தில் இருந்து அகமதாபாத்திற்கு 250 கி.மீ தூரம் அதிவேகமாக எடுத்துச் செல்லப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை சேவையின் தனித்துவமான உதாரணம் என குஜராத் முதல்வர் புபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் ரயில்வே கோட்ட மேலாளர் வேத் பிரகாஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில் ” இது இந்திய ரயில்வேக்கு ஒரு பெருமை மற்றும் மனநிறைவை அளித்த தருணம். இந்திய ரயில்வே வரலாறு படைத்துள்ளது. முதன்முறையாக, மும்பை சென்ட்ரல்-காந்திநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தானமாகப் பெறப்பட்ட ஒரு இதயத்தைச் சூரத்தில் இருந்து அகமதாபாத்திற்கு வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்துள்ளது” என தெரிவித்துள்ளார்.