

பஸ்தர்: ‘திமாகி’ நக்சல்களை தோற்கடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் பாதுகாப்புப் படை வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களுடன் இணைந்து அவர் தீபாவளியை கொண்டாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்த ஆண்டு தீபாவளி இந்தியாவுக்கு சிறப்பானது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாவோயிஸ்ட், நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தியாகம், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கவே இந்த ஆண்டு பஸ்தரில் சிஆர்பிஎப் வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுகிறேன்.
ஒரு காலத்தில் சத்தீஸ்கர், பிஹார், ஒடிசா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட், நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் சத்தீஸ்கரில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 2004 முதல் 2013 வரை உயிரிழப்பு அதிகம்.
பாஜக அரசு பதவியேற்ற பிறகு மாவோயிஸ்ட், நக்சல் தீவிரவாதத்துக்கு எதிராக அதிதீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக 20 மாநிலங்களின் 230 மாவட்டங்களில் இருந்து மாவோயிஸ்ட், நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பஸ்தர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வளர்ச்சித் திட்டப் பணிகள் வேகம் பெற்று உள்ளன.
வனப்பகுதிகளில் சுற்றித் திரிந்த ஆயுதமேந்திய நக்சல்கள் ஒழிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் நாட்டுக்குள் சுற்றித் திரியும் ‘திமாகி’ நக்சல்கள் (மனதளவில் நக்சல்) நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளில் ஊடுருவி உள்ளனர். அவர்களை அடையளம் கண்டு தோற்கடிக்க வேண்டும். நமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.
உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி இந்தியர்கள் தீவிர வறுமையிலிருந்து மீண்டு உள்ளனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை ஆகும். ஜன் தன் வங்கிக் கணக்குகள், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் ஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்களிடம் புதிய தன்னம்பிக்கை உருவாகியுள்ளது.
போதைப் பொருள் இல்லாத இந்தியா, சுயசார்பு இந்தியா, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு இலக்குகளை நிர்ணயித்து உள்ளோம். இந்த இலக்குகளை எட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.