“உக்ரைன் போரை அமைதி வழியில் தீர்க்க இந்தியா உதவத் தயார்” - ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி

“உக்ரைன் போரை அமைதி வழியில் தீர்க்க இந்தியா உதவத் தயார்” - ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி
Updated on: 
1 min read

புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் திங்கள்கிழமை தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் போருக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் உதவ இந்தியா தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலின் போது இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், தற்போதைய போரின் கள நிலவரங்கள் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமே போருக்குத் தீர்வு காண முடியும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி: “அதிபர் ஜெலென்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இருதரப்பு கூட்டுறவை மதிப்பாய்வு செய்ததுடன், இந்தியா-உக்ரைன் உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டோம்.

அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகள் மற்றும் மனிதாபிமான அம்சங்கள் குறித்த தமது பார்வைகளைப் பகிர்ந்துகொண்டதற்காக அதிபர் ஜெலென்ஸ்கிக்கு நன்றி தெரிவித்தேன். அமைதியான தீர்வை எட்டுவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் பங்களிக்க இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அபுதாபியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கான ஆயத்தப் பணிகள் குறித்துப் பிரதமர் மோடியிடம் விளக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவும் தனது உடன்பாட்டைச் செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கருங்கடல் வழியிலான தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுத்துள்ளதால் சர்வதேச அளவில் உணவுப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜெலென்ஸ்கி, உணவுப் பாதைகளை சீரமைக்க இந்தியா மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும், இந்த முயற்சியை உக்ரைன் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் இப்போரை முடிக்க இந்தியா தொடர்ந்து ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“உக்ரைன் போரை அமைதி வழியில் தீர்க்க இந்தியா உதவத் தயார்” - ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி
“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்

X