பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிக்கள்
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 எம்பிக்கள் பாஜகவில் இணைந்தது செல்லாது என்று முன்னாள் மக்களவை பொதுச் செயலாளரும் அரசியலமைப்பு நிபுணருமான பி.டி.டி. ஆச்சாரி தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பி.க்கள் இருந்தனர். கட்சியின் முக்கியத் தலைவரான ராகவ் சத்தா எம்.பி., அக்கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ராகவ் சத்தா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக கடந்த 24-ம் தேதி அறிவித்தார். அவருடன், அக்கட்சியின் மேலும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களும் பாஜகவில் இணைவதாக அறிவித்தனர். மேலும், ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பது தொடர்பாக 7 பேரும் கையெழுத்திட்ட கடிதத்தை அவர்கள் மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, 7 பேரும் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் சென்று கட்சித் தலைவர் நிதின் நபின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு இனிப்பு வழங்கி நிதின் நபின் வரவேற்றார். இதன்மூலம், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு கட்சியின் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் விலகி, வேறொரு கட்சியில் இணைந்தால் மட்டுமே அவர்களின் பதவி பறிபோகாது. இந்த நிலையில், தற்போது மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் விலகியுள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என கூறப்படுகிறது. இந்த அடிப்படையில், பாஜகவில் இணையும் ஏழு எம்பிக்களின் கடிதத்தை சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா குழுவினர், “இணைப்புக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பலத்தை நாங்கள் பூர்த்தி செய்துவிட்டோம். எனவே, பாஜகவுடனான இணைப்பு சட்டப்பூர்வமானது” என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 7 பேர் கட்சி மாறியதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர் சஞ்சய் சிங், மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மனு அளித்துள்ளார். அதில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய 7 எம்பிக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் மக்களவை பொதுச் செயலாளரும் அரசியலமைப்பு நிபுணருமான பி.டி.டி. ஆச்சாரி, “சஞ்சய் சிங் தாக்கல் செய்துள்ள மனு, மாநிலங்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. மாநிலங்களவைத் தலைவர் அந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிறகே ஆம் ஆத்மி கட்சியால் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். ஆம் ஆத்மி எம்பிக்கள், பாஜகவுடன் இணைய விடுத்த கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டாலும் அதற்கு எவ்வித சட்ட ரீதியான தாக்கங்களும் இல்லை.
10-வது அட்டவணையின் (கட்சித் தாவல் தடைச் சட்டம்) கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி அவையில் ஒரு கட்சியின் பலத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் அவைத் தலைவருக்கும் செயலகத்துக்கும் முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். எனவே இந்த இணைப்பு 10-வது அட்டவணைப்படி ஒரு சட்ட மீறல். 10வது அட்டவணையின் 4வது பத்தியின் துணைப்பத்தி, இந்த இணைப்பு என்பது அரசியல் கட்சியின் மூலமாகவே நடைபெற வேண்டும் என்று கூறுகிறது” என தெரிவித்துள்ளார்.