பெட்ரோல் - டீசல் வாங்க ஏனாமிற்கு படையெடுக்கும் ஆந்திர பண்ணை விவசாயிகள்: உள்ளூர்வாசிகள் பாதிப்பு

பெட்ரோல் - டீசல் வாங்க ஏனாமிற்கு படையெடுக்கும் ஆந்திர பண்ணை விவசாயிகள்: உள்ளூர்வாசிகள் பாதிப்பு
Updated on
1 min read

புதுச்சேரி: பெட்ரோல் - டீசல் வாங்க ஏனாமிற்கு படையெடுக்கும் ஆந்திர பண்ணை விவசாயிகள் கேன் மற்றும் பேரல்களுடன் பல மணி நேரம் காத்திருந்து வாங்குவதால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் இயந்திரங்கள் மூலம் பயிர் அறுவடை செய்வதால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விநியோகத்திலும் அங்கு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடல் மற்றும் ஆற்றுப் பகுதியில் இறால் மற்றும் மீன் குட்டைகளில் அதிக ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலை காரணமாக ஆந்திராவை ஒட்டியுள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க வருவதால் உள்ளூர் மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கேன்களை வரிசையில் வைத்து நுகர்வோர் காத்திருக்கின்றனர். பெட்ரோல் நிலையங்களில் காவல் துறை முன்னிலையில் எரிபொருள் விநியோகம் நடத்த ஏனாம் நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. ஏனாம் காவல் கண்காணிப்பாளர் வரதராஜன் மேற்பார்வையில் மக்களுக்கு தடையின்றி எரிபொருள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து வரும் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் செவ்வாய்க்கிழமை முதல், ஏனாம் உள்ளூர் மக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை, உள்ளூர் பெட்ரோல் நிலையங்களில் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தை விட ஏனாமில் எரிபொருள் விலை ரூ.12 முதல் 14 வரை குறைவாக உள்ளது.

எனவே, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக விவசாயிகள் பிளாஸ்டிக் கேன் மற்றும் பேரல்களுடன் எரிபொருள் வாங்க ஏனாமிற்கு திரண்டு வருகின்றனர். இவ்வாறு வெளியூர் மக்கள் திரண்டு வருவதால், ஏனாம் உள்ளூர் மக்கள் கோடை வெயிலில் மணிக்கணக்கில் காத்திருந்து, தங்கள் சொந்த வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதற்குப் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

பல்வேறு சங்கங்கள் இப்பிரச்சினையை எழுப்பியதைத் தொடர்ந்து, பிராந்திய நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா, பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி, காலை 5 மணி முதல் 8 மணி வரையிலான இந்த நேரத்தை ஏனாம் மக்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வாங்குபவர்கள் வருவதற்கு முன்பாகவே, உள்ளூர் மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், ஏனாம் நிர்வாகம் அதிகாலை நேரங்களை அவர்களுக்காக இன்று முதல் ஒதுக்கியுள்ளது.

பெட்ரோல் - டீசல் வாங்க ஏனாமிற்கு படையெடுக்கும் ஆந்திர பண்ணை விவசாயிகள்: உள்ளூர்வாசிகள் பாதிப்பு
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in