“மாணவர்களை அரசியலுக்காகப் பயன்படுத்தும் காங்கிரஸ்” - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் காட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் | கோப்புப்படம்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிஜேபி அமைப்பினர் நடத்திய பேரணி மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் பிரதமரின் இல்லம் எதிரே காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய போராட்டம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மாணவர்களைத் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு நாடாளுமன்றச் செயல்பாடுகளை முடக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தர்மேந்திர பிரதான், “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முடக்குவதற்காக மாணவர்களைத் தங்களின் அரசியல் கருவிகளாக வெட்கமின்றித் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தத் தேர்வு செய்து, பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதோடு, நடைமுறையிலுள்ள பாதுகாப்பு விதிகளையும் மதிக்காமல் செயல்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்த பிறகும், காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான விவாதத்துக்கு பதிலாக அரசியல் நாடகத்தையே தேர்ந்தெடுத்துள்ளது. மாணவர்களுக்கான தீர்வுகளைக் காண்பது அவர்களின் நோக்கமல்ல. தலைப்புச் செய்திகளுக்காகக் குழப்பத்தை உருவாக்குவதே அவர்களின் ஒரே எண்ணமாகும்.

ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, இது மாணவர்களுக்கான விஷயம் அல்ல. பேச்சுவார்த்தைக்கான அனைத்து கதவுகளும் திறக்கப்பட்ட பின்னரும், மோதல் போக்கை உருவாக்குவதே அவரின் நோக்கம்.

நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்தும், நமது இளைஞர்களின் நியாயமான ஒவ்வொரு கருத்து குறித்தும் விவாதிக்க நமது அரசு 100% உறுதியுடன் உள்ளது. இந்திய மாணவர்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கானப் பொருட்களாக நடத்தப்படுவதை விட மேலான தகுதி படைத்தவர்கள். அவர்களுக்குக் குழப்பத்திற்குப் பதிலாக நிச்சயத்தன்மையும், வெறுமனே முழக்கங்களுக்குப் பதிலாகத் தீர்வுகளும், நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பதிலாகப் பொறுப்புணர்வுமே தேவை.

மாணவர்களுக்கு வெறுமனே ஆத்திரத்தைக் காட்டுவதை விடவும் அதிகமான கடமை நமக்கு உள்ளது. அவர்களுக்குப் பதில்களையும், சீர்திருத்தங்களையும், பொறுப்புணர்வையும் வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அதை வழங்குவதில் தான் நமது அரசு உறுதியோடு உள்ளது” இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

முன்னதாகப் பிரதமரின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து பின்னர் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் | கோப்புப்படம்
2026 - 2027-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in