

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2026 -2027 நிதி ஆண்டுக்கான தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல் ஆகிறது. மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாததால்,காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தை கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. அதன்பின் தவெக ஆட்சி அமைத்தது.
அந்தக் கட்சியின் தலைவர் விஜய், மாநிலத்தின் புதிய முதல்வராகக் கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் விஜய் உட்பட 35 அமைச்சர்கள் தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். ஆட்சியமைக்க ஆதரவளித்த கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்கியது. அன்றைய கூட்டத்தில் தமிழக அரசு தயாரித்த உரையை எந்த மாற்றமும் இன்றி முழுமையாக ஆளுநர் அர்லேகர் வாசித்தார். அதன்பின் அலுவல் ஆய்வுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடத்தப்பட்டது. பின்பு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பட்ஜெட்டை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கேற்ப பட்ஜெட் தயாரிப்பு பணிகள் ஏற்கெனவே முடுக்கிவிடப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் கடந்த ஜூலை 2-ம் தேதி தொடங்கி துறைகள் வாரியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்கள் ஜூலை 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் சென்னை முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஜூலை 16-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறப்பம்சங்கள், தேர்தல் வாக்குறுதிகளில் உடனே நிறைவேற்றக் கூடிய அறிவிப்புகள், மகளிர் உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. அவற்றில் சில திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பட்ஜெட் கூட்டத் தொடருக்கு அமைச்சர்கள் முழுமையாக தயாராகி வரவேண்டும் எனவும் முதல்வர் விஜய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் எனவும், அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 10 மணிக்கு கூடும். அன்றைய தினம் திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். அதில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்துவது என்பது பற்றிய முடிவுகள் எடுக்கப்படும். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.
எம்எல்ஏ கைது விவகாரம்: ஒரு எம்எல்ஏவை சட்டப்பேரவை எல்லைக்கு உட்பட்ட இடங்களில் கைது செய்யும் சந்தர்ப்பங்களில் மட்டுமே சபாநாயகரிடம் முன் அனுமதி கேட்க வேண்டும். சட்டப்பேரவைக்கு வெளியே நடைபெறும் சம்பவங்களுக்கு, சபாநாயகரிடம் அனுமதி பெற்றுதான் கைது செய்ய வேண்டும் என்று விதி கிடையாது. ஒரு எம்எல்ஏ கைது செய்யப்பட்டவுடன், மாவட்ட கண்காணிப்பாளர் உடனே எனக்கு தகவல் தெரிவித்தார். நான் அதை மற்ற எம்எல்ஏ.க்களுக்கு முறையாக தெரிவித்தேன்.
முதல்வர் விஜய் விதிகளுக்கு உட்பட்டுதான் சட்டப்பேரவையில் சைகை செய்தார். முதல்வரின் கை அசைவை பார்த்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை புரிந்து கொண்டு அவருக்கு அனுமதி அளித்தேன்.இதையெல்லாம் விதிகளுக்கு முரணானது என்று சொல்ல முடியாது. அதேநேரம் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் என்ன சைகை செய்யப் போகிறார்கள் என்பதை என்னிடம் தெரிவித்தால் அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்வேன். இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களைக் கவரும் வகையில் இடம்பெறும் எனவும், மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள், புதிய தொழில் கொள்கை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை: முதல்வர் விஜய் தலைமையில் மனிதவள மேலாண்மை துறையின் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மரிய வில்சன், சரத்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசின் நிதிநிலையைப் பொறுத்து காலிப் பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நிரப்பவும், அரசு ஊழியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவை விரிவாக்கம் செய்யவும் முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.