

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டால், சாதுக்கள், மடாதிபதிகள் கோபம் அடைந்துள்ளனர்.
அயோத்திக்கு வரும் பக்தர்கள் அதைச் சுற்றியுள்ள கோயில்கள், மடங்களிலும் தரிசனம் செய்து காணிக்கைகளை அள்ளி வழங்குவது வழக்கம். ஆனால், ராமர் கோயில் காணிக்கை திருட்டால், பக்தர்கள் வருகை மற்றும் காணிக்கைகள் குறைந்துள்ளன.
இதுகுறித்து மூத்த துறவி ராம்தாஸ் பால் யோகி மகாராஜ் கூறியதாவது: “பக்தர்கள் கோபத்தில் உள்ளனர். பக்தர்கள் வருகையின் எண்ணிக்கை, காணிக்கைகள் குறைந்துள்ளது. இது அயோத்தி முழுவதையும் பாதிக்கிறது. ராமர் கோயிலுக்கு வருபவர்கள் எங்கள் கோயிலுக்கும் வருவார்கள். நாங்கள் சரயு நதிக் கரையில் இருப்பதால், மாலை நேர ஆரத்திக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
ஆனால் இப்போது அயோத்தியில் வருகை குறைந்துள்ளது. திருடினால் எப்படி காணிக்கை கிடைக்கும் ? ஒட்டுமொத்த அயோத்தியும் இதற்கான தண்டனையை அனுபவிக்கிறது. பகவான் ராமர் இந்தத் திருடர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்.
சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் இந்த விஷயத்தை வெளிப்படுத்திய போதுதான் அனைவரும் அறிந்தனர். ஆனால், ராமர் கோயில் நிர்வாகி சம்பத் ராய், கணக்கு சரியாக இருக்கிறது. அப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை. குழப்பம் ஏற்படுத்துகின்றனர்” என்று கூறி கோயிலில் நடப்பதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதற்கு முன்பு மிகப்பெரிய நில மோசடி நடந்துள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் 25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. அப்போதும் கூட இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் சிறிய மீன்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பெரிய மீன்கள் தப்பிக்க விடப்பட்டுள்ளனர்.
இன்றும் கூட, அரசு ஆதரவு பெற்ற சாமியார்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் வலம் வரும் சாமியார்கள் இது குறித்துப் பேசத் தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆதாரங்கள் அழிப்பு; ரூ.79 லட்சம் பறிமுதல்: ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் ஆதாரங்களை அழித்தது தெரிய வந்துள்ளது. முக்கியக் குற்றவாளியான டின்னு யாதவ் (எ) ராம் ஷங்கர் யாதவ் உள்ளிட்ட 8 பேர் இந்த வழக்கில் கைதாகினர். கடந்த ஜூன் 6ம் தேதி திருட்டு விவகாரம் வெளிவந்த பின்னர், அறக்கட்டளை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
அதற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள், வாட்ஸ்- அப் போன்ற செயலிகளில் இருந்த தகவல்களை அழித்துள்ளனர். கைப்பேசிகளை ‘பார்மட்’ செய்து தரவுகளை அழித்துள்ளனர். இந்நிலையில், அயோத்தி போலீஸார் நேற்று சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், நேற்று மாலை வரை ரூ.79 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
டின்னு யாதவும் அவரது கூட்டளிகளும் ராமர் கோயிலில் செல்வாக்குடன் இருந்துள்ளனர். இந்த வழக்கில் வங்கி அதிகாரிகளும் விசாரணையில் உள்ளனர். கடந்த 45 நாட்களில் அனைத்து சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளையும் போலீஸார் கைப்பற்றி உள்ளனர். அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கோயிலில் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. எனினும், எவ்வளவு காலமாக இந்த காணிக்கைப் பணம் திருடப்பட்டது என்று தெரியவில்லை. ஏனெனில் 45 நாட்களுக்கு முந்தைய கேமரா பதிவுகள் சேமிப்பில் இல்லை.
இதற்கிடையில், அறக்கட்டளை நிர்வாகிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பது குறித்து உத்தர பிரதேச அரசின் எஸ்ஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் அடுத்த கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் புதிய பொதுச்செயலாளர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.