

புதுடெல்லி: டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சோனியா காந்தி (79) காய்ச்சல் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10:22 மணியளவில் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வானிலையில் ஏற்பட்ட மாற்றமே அவரது உடல்நலக்குறைவுக்கு காரணம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் நேற்று கூறுகையில், “கடந்த மார்ச் 24ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்திக்கு, உடலில் பரவியுள்ள நோய்த் தொற்றை கட்டுப்படுத்த ஆன்ட்டி பயாடிக் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தச் சிகிச்சைக்கு அவர் சிறப்பாக ஒத்துழைத்து வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூத்த மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார். அக்குழுவினர் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்” என்றார்.