

கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி
பெங்களூரு: “கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் கர்நாடகாவில் வாழும் கன்னடர்களே. கர்நாடக விவகாரத்தில் ஏன் மற்றவர்கள் தலையிட வேண்டும். உதாரணத்துக்கு தேர்தலின்போது விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள்,” என்று அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தச் சம்பவம் கர்நாடகா தொடர்புடையது. அவர்கள் அவர்களது பணியைச் செய்யட்டும். கர்நாடக விவகாரத்தில் ஏன் தலையிட வேண்டும். உதாரணத்துக்கு தேர்தலின்போது விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள்.
இது எங்கள் மாநில விவகாரம். அவர்கள் தமிழர்களாகவோ, வேறு எந்தச் சாதியை, மதத்தைச் சார்ந்தவர்களாகவோ இருக்கலாம். அவர்கள் அனைவரும் எங்கள் கன்னடர்கள். பல பத்தாண்டுகளாக அவர்கள் கர்நாடகாவில்தான் வசித்து வந்தார்கள்.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வரும் 21 அல்லது 22-ம் தேதிகளில் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை அறிக்கை வெளியாகும். எங்கள் துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நான் கடுமையான நடவடிக்கையை எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் டி.கே.சிவக்குமார், ஒரு மாநிலத்தின் உள்விவகாரத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், “ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது. ஓ. பன்னீர்செல்வம் அல்லது வேறு யாராக இருந்தாலும் இந்த அடிப்படைப் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் என்னால் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கே உரிய பிரச்சினைகள் உள்ளன. நமது மாநிலத்தை எப்படிக் காப்பது என்பது நமக்குத் தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும், நாம் நமது பணியைச் செய்வோம். அவர்களின் நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. நமது மாநிலத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டியது அவசியம். அவர்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டும்; நாம் நமது பணியைச் செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் மானை வேட்டையாடியதாக கர்நாடகத்தைச் சேர்ந்த தமிழர்களான அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகியோர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வனத்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களும் இறுதி திருப்பலிக்கு பின்னர், அவர்களின் சொந்த கிராமங்களில் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.