டெல்லி அரசு ஊழியர்களுக்கு இனி வாரம் 2 நாள் ஒர்க் ஃப்ரம் ஹோம்!

எரிபொருள் சிக்கனத்துக்கு அதிரடி நடவடிக்கைகள்
டெல்லி முதல்வர் ரேகா குப்தா | கோப்புப் படம்
டெல்லி முதல்வர் ரேகா குப்தா | கோப்புப் படம்
Updated on
2 min read

புதுடெல்லி: எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், டெல்லி அரசு இன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.

டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக ரேகா குப்தா இருக்கிறார். எரிபொருள் சிக்கனத்துக்கான கோரிக்கையை பிரதமர் மோடி அண்மையில் முன்வைத்த நிலையில், டெல்லி அரசு அதன் ஊழியர்கள் வாரத்துக்கு 2 நாட்கள் வீட்டிலிருந்து பணி புரிய வேண்டும், வாரம் ஒருமுறை கார் பயன்படுத்தாத நாளாக கடைப்பிடிக்க வேண்டும், வாரத்தில் ஒரு நாள் அனைவரும் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க வேண்டும் முதலான பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. டெல்லி முதல்வர் ரேகா குப்தா இந்த நடவடிக்கைகளை அறிவித்தார்.

அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சில நாடுகளில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளன. எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர், “கரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றுவது, ஆன்லைனில் ஆலோசனை கூட்டம் நடத்துவது போன்ற நடைமுறைக்கு நாம் பழகிக் கொண்டோம். தற்போது மீண்டும் அதை நாம் நம் தேசத்தின் நலன் கருதி பின்பற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அது இன்றைய காலத்தின் கட்டாயமும் கூட. இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும்.

பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை உலக அளவில் விலை உயர்ந்துள்ளது. இத்தகைய சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை, பெட்ரோல் மற்றும் டீசலை சேமிப்பதன் மூலம் அதை மிச்சப்படுத்துவது நம் எல்லோரது பொறுப்பாகும். இதே நிலைதான் சமையல் எண்ணெய்க்கும் உள்ளது. அதன் பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டி உள்ளது. இது தேசபக்திக்கு சிறந்தவொரு பங்களிப்பாக இருக்கும்” என்று பிரதமர் கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி, டெல்லியில் அரசு ஊழியர்கள் இனி வாரத்துக்கு 2 நாட்கள் வீட்டில் இருந்து பணி புரிய வேண்டும். அரசு அலுவல் ஆலோசனைக் கூட்டங்களில் 50% கூட்டங்கள் ஆன்லைனில் நடத்த வேண்டும். இது அந்தக் கூட்டங்களுக்கு செல்ல வேண்டியதற்கான வாகனப் பயன்பாட்டைக் குறைத்து அதன்மூலம் எரிபொருள் பயன்பாடு குறைவதை உறுதி செய்யும்.

டெல்லி மாநகராட்சி தனது ஊழியர்களின் பணி நேரங்களை மாற்றியமைக்க வேண்டும். இதன்மூலம் போக்குவரத்து உச்ச நேரங்களில் நெரிசலும் அதனால் ஏற்படும் எரிபொருள் செலவும் குறையும்.

அதேபோல் அரசு வாகனங்கள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் மாதாந்திர பெட்ரோல் அளவும் 20% வரை குறைக்கப்படுகிறது. இதன்மூலம் அரசு உயரதிகாரிகள் வாகனங்களுக்கு மாதத்துக்கு 200 லிட்டர் வரையில் தான் பெட்ரோல் வழங்கப்படும்.

டெல்லி மக்கள் பொது போக்குவரத்தை அதிகப்படியாக பயன்படுத்தும் வகையில், வாரம் இரு நாள் அனைவரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த ஊக்குவிக்க ‘மெட்ரோ மண்டே’ அனுசரிக்கப்படும்.

அதேபோல் வாரம் ஒருமுறை மக்கள் கார் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் ‘நோ கார் டே’ பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள 29 அரசு குடியிருப்புகளில் 58 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

டெல்லி அரசு அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவித புதிய வாகனக் கொள்முதலையும் மேற்கொள்ளாது என அடுக்கடுக்கான அறிவிப்புகளை முதல்வர் ரேகா குப்தா அறிவித்தார்.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா | கோப்புப் படம்
16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் மே 30-ல் தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in