பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறல் புகார்: டெல்லி காவல் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கியதால் சர்ச்சை

பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறல் புகார்: டெல்லி காவல் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கியதால் சர்ச்சை
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 3-ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது, பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான உதவி காவல் ஆணையர் விவேக் பகத், கூடுதல் துணை காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்றிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது செய்தியாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சில நாட்களிலேயே விவேக் பகத்திற்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது வழக்கமான காலமுறை அடிப்படையிலான பதவி உயர்வு நடைமுறை என்றும், இதற்கான கோரிக்கைகள் நீண்ட நாட்களுக்கு முன்பே அனுப்பப்பட்டுவிட்டதாகவும் உயர் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவேக் பகத்துடன் சேர்த்து மேலும் 11 அதிகாரிகளுக்கும், அவரது பேட்சைச் சேர்ந்த மேலும் 3 அதிகாரிகளுக்கும் இதே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே, "பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக இந்த அதிகாரிக்கு வெகுமதி அளிக்கப்படுகிறதா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பிருந்தா காராத், ஆயிஷி கோஷ் உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யவும் வலியுறுத்தினர்.

அக். 3 போராட்டத்தின் போது பெண் பத்திரிகையாளர்கள் மூவர் மீது காவல் துறையினர் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்ற போதிலும், இந்த வழக்கு டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறல் புகார்: டெல்லி காவல் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கியதால் சர்ச்சை
புகார் அளித்தவர் மீது பொய் வழக்கு: கோயம்பேடு துணை போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in