அசாம் வெள்ளம்: உயிரிழப்பு 100 ஆக அதிகரிப்பு - 1.3 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் வெள்ளம்: உயிரிழப்பு 100 ஆக அதிகரிப்பு - 1.3 லட்சம் மக்கள் பாதிப்பு
Updated on
1 min read

கவுகாத்தி: அசாமில் தொடர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1.37 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மைத் தகவல் மையம் ஓர் அறிக்கையின்படி, கோலாகாட், சிவசாகர், ஹோஜாய், தர்ராங், லக்கீம்பூர், ஜோர்ஹாட், கார்பி ஆங்லாங், சராடியோ, நகோன் மற்றும் விஸ்வநாத் ஆகிய 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இங்குள்ள 28 வருவாய் வட்டங்களும், 456 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கோலாகாட் மாவட்டத்தில் அதிகபட்சமாக 68,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவசாகர் மாவட்டத்தில் 39,495, ஜோர்ஹாட் மாவட்டத்தில் 16,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 11,933 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட தகவல்களின்படி, தான்சிரி ஆறு கோலாகாட் மற்றும் நுமாலிகர் பகுதிகளில் அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. குஷியாரா ஆறும் ஸ்ரீபூமி பகுதியில் அபாயக் கட்டத்தைத் தாண்டி வழிகிறது.

வெள்ளப் பாதிப்பால் 125 நிவாரண முகாம்களும், விநியோக மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் சுமார் 8,000 பேர் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,592 ஆண்கள், 3,437 பெண்கள் மற்றும் 919 குழந்தைகள் அடங்குவர்.

சிவசாகர் மாவட்டத்தில் 516 வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்குள்ள நிவாரண முகாம்களில் 4,649 பேர் தஞ்சமடைந்துள்ளனர். ஜோர்ஹாட் பகுதியில் படகுகள் மூலம் 107 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பகுதிகளில் 59 மருத்துவக் குழுக்கள் முகாமிட்டுள்ளன. மேலும் 10 மீட்புப் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அசாம் வெள்ளம்: உயிரிழப்பு 100 ஆக அதிகரிப்பு - 1.3 லட்சம் மக்கள் பாதிப்பு
‘கல்’ ட்ரோன் - உலக ஆயுதச் சந்தையில் இந்தியாவின் புதிய ‘பிரம்மாஸ்திரம்’!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in