"கோவா தீ விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு" - முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல்

"கோவா தீ விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு" - முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல்
Updated on
1 min read

அர்போரா: வடக்கு கோவாவின் அர்போராவில் உள்ள ஒரு இரவு விடுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், “இது ஒரு துரதிர்ஷ்டவசமான நாள். கோவாவின் சுற்றுலா வரலாற்றில் முதல்முறையாக, இவ்வளவு பெரிய தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 25 பேர் இறந்தனர். அதிகாலை 1.30-2 மணிக்கு நான் சம்பவ இடத்தை அடைந்தேன், உள்ளூர் எம்எல்ஏ மைக்கேல் லோபோ என்னுடன் இருந்தார். அனைத்து அதிகாரிகளும் அங்கு இருந்தனர்.

அரை மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டது. முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் நான்கு பேர் சுற்றுலாப் பயணிகள், மீதமுள்ளவர்கள் கிளப் ஊழியர்கள். அவர்களின் மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கும். மருத்துவமனையில் உள்ள 6 பேருக்கு கோவா மருத்துவக் கல்லூரியில் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. கல்லூரியின் டீனுடன் நான் பேசியுள்ளேன். இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். கிளப் என்ன அனுமதிகளைப் பெற்றது, யார் அனுமதி அளித்தது என்பது குறித்து விசாரிக்கப்படும்.

தீ பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கட்டிட கட்டுமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். கிளப் உரிமையாளர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலாளர்கள் மற்றும் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

பிரதமர் மோடி இன்று காலை என்னை அழைத்து அனைத்து விவரங்களையும் கேட்டார். காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களையும் கேட்டார். பிரதமரிடம் இதுபற்றி விரிவாக விளக்கினேன். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் ஒருபோதும் நடக்காமல் இருக்க கோவா அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று கூறினார்.

வடக்கு கோவாவில் உள்ள அர்போரா பகுதியில் அமைந்துள்ள கடற்கரையோர நைட் கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

"கோவா தீ விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு" - முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல்
கோவா நைட் கிளப்பில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in