

பஞ்சிம்: வடக்கு கோவாவில் உள்ள அப்போரா பகுதியில் அமைந்துள்ள கடற்கரையோர நைட் கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். விடுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் மாநிலங்களில் ஒன்று கோவா. அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ள இந்த மாநிலத்தில் போர்ச்சுகல் பாரம்பரிய கட்டிடங்கள், கோட்டைகள், தேவாலயங்கள் மற்றும் இயற்கை எழிலுடன் கூடிய பல்வேறு கடற்கரை பகுதிகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவது வழக்கம்.
இந்த கடற்கரையோர பகுதிகளில் தங்கும் விடுதிகள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் அதிகம் அமைந்துள்ளன. நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம் சீசன் டைம் என உள்ளூர் மக்கள் சொல்வதுண்டு. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நாட்கள் இதில் அடங்கும்.
இந்நிலையில், சனிக்கிழமை (டிச.6) நள்ளிரவு வடக்கு கோவாவின் அப்போரா பகுதியில் அமைந்துள்ள இரவு நேர விடுதி ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தம் 3 பெண்கள் உட்பட 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுதியில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களில் 3 முதல் 4 பேர் சுற்றுலா பயணிகள் என்றும், மற்றவர்கள் விடுதியின் சமையலறையில் பணியில் இருந்தவர்கள் என்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். 20 பேர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த விடுதியில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து விடுதிகளிலும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்ற படுகிறதா என்பதை தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபா வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்: கோவா இரவு நேர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்த தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
கோவா இரவு நேர விடுதியில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.