

புதுடெல்லி: கடந்த 2013-ல் உடன் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, ‘தெஹல்கா’ முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது கோவாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தருண் தேஜ்பாலை கடந்த 2021-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தருண் தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, தான் சரணடைவதில் இருந்து விலக்கு கோரி இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி அலோக் ஆராதே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, சரணடைவதில் இருந்து விலக்கு கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
மேலும், அவர் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழைத் தாக்கல் செய்த பின்னரே, உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.