

சென்னை: காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு தானியங்கி இயந்திரங்களை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆட்சியில் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்துக்கு தனியாக பணியாளர்களை நியமிக்கப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர், காலி பாட்டிலை திரும்பப் பெற, தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்த, டாஸ்மாக் முடிவு செய்து ஒரு சில கடைகளில் சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டது. இந்த தானியங்கி இயந்திரத்தில், மதுபாட்டிலில் உள்ள கியூஆர் குறியீடை ஸ்கேன் செய்து, செல்போன் எண், யுபிஐ பரிவர்த்தனைக்கான கியூஆர் குறியீடு மூலம் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையில், இந்த இயந்திரத்தை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நிறுவ டெண்டர் கோரப் பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி முதல் விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறலாம். செப்.28ம் முதல் அக். 5-ம் தேதி காலை 11 மணி வரை ஒப்பந்தபுள்ளிகளை சமர்பிக்கலாம். அக்.5-ம் தேதி டெண்டர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நகர் பகுதிகள், அதிக வருவாய் கிடைக்கும் கடைகளில் தானியங்கி இயந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.