

இந்தூர்: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சதீஷ் குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்தியாவிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் சேவையை கடந்த ஜூலை 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இது ஹரியானாவில் உள்ள 89 கி.மீ. நீளமுள்ள ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் இயக்க வேகம் இதுவரை மணிக்கு 75 கி.மீ. ஆக உள்ளது. எனினும், மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இயக்குவதற்கான சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
இதையடுத்து, இந்த ரயிலை மணிக்கு 110 கி.மீ. வேகம் வரை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது. இந்த ரயிலை எந்த வழித் தடங்களில் இயக்குவது என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் விநியோக ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
படுக்கை வசதி (ஸ்லீப்பர்) கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் தற்போது ஹவுரா - காமாக்யா இடையே இயக்கப்பட்டு வருகிறது. மேலும், 4 ரயில்கள் தயாராகியுள்ளன. இந்த ஆண்டு மேலும் 11 ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சதீஷ் குமார் கூறினார்.