

மும்பை: டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் கிளையில் ஊழியர்களுக்கு உணவில் போதைப் பொருள் கலந்து கொடுத்து மதமாற்றத்துக்கான மூளைச்சலவையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டாடா கல்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) நிறுவனத்தின் நாசிக் கிளையில் ஊழியர்கள் சிலர் தங்களுக்கு கீழ் பணியாற்றும் நபர்களுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் மதமாற்றம் செய்ய முயன்றாக குற்றச் சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 7 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் டிசிஎஸ் ஊழியர் ஒருவர் கூறியதாவது: எங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய தவுசிப் பிலால் அத்தர் என்ற சீனியர் ஊழியர் என்னுடன் நட்பாக பழகினார். பின்னர் ரம்ஜான் பண்டிகைக்காக தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். நான் சென்றபோது எனக்கு முதலில் சேமியா பாயாசம் வழங்கினர். அதை சாப்பிட்டதும், போதைப் பொருள் சாப்பிட்டது போல் குழப்பமான மனநிலைக்கு சென்றேன்.
எனது குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை கேட்டறிந்த தவுசிப், அவற்றை பில்லி சூனியம் மூலம் சரி செய்து விடலாம் என கூறினார். பின்னர் எனக்கு குல்லா அணிவித்து படம் பிடித்து, அந்த போட்டோவை அலுவலக நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் பதிவேற்றினார்.
என்னுடன் நட்பாக பழகினாலும், எனது பணித் திறன் மோசமாக இருப்பதாக மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி, என்னை நிலைகுலைய செய்து, நான் அவர்களை எப்போதும் சார்ந்திருக்கும்படியான நிலைக்கு கொண்டு வந்தார். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஊழியர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 29-ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி தவுசிப் பிலால், அத்தர், டேனிஷ் ஷேக், ஷாருக் உசேன், ரஷா ரஃபிக் மேமன் ஆகியோரை மும்பை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் மதமாதற்றத்துக்கு குல்லா வாங்கிய கடை, அசைவ உணவு சாப்பிட்ட ஓட்டல் ஆகியவற்றில் ஆதாரங்களைத் திரட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், டேனிஷ் ஷேக்கின் செல்போன் தனி கடவுச் சொற்கள், முக அடையாளம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனால் தடயவியல் அறிவியல் ஆய்வு மையத்துக்கு அவரை அழைத்துச் சென்று செல்போன் ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.