

புதுடெல்லி: ராஜஸ்தானில் பாஜக ஆளும் கட்சியாகவும், அதன் முக்கிய எதிர்கட்சியாகக் காங்கிரஸும் உள்ளன. இந்நிலையில் பஞ்சாயத்துத் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், 37 மாவட்டங்களை உள்ளடக்கிய மொத்தம் உள்ள 419 பஞ்சாயத்து சமிதி இடங்களுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், காங்கிரஸ் 275 இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், பாஜக 63 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதி முடிவுகளில், பாஜகவை விட காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பல இடங்களில், சிறிய கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் பாஜகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் காரணியாக மாறியுள்ளனர். மொத்தம் உள்ள 37 ஜில்லா பரிஷத் இடங்களில், காங்கிரஸ் 23 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதே சமயம், பாஜக 5 இடங்களில் வெற்றி பெற்று, மேலும் 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
நாகூரில் ஆர்எல்பி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாலோத்ராவில், காங்கிரஸும் பாஜகவும் தலா 12 இடங்களைப் பெற்றுள்ளன. இங்கு 7 இடங்களைக் கொண்டுள்ள ஆர்எல்பி, கிங்மேக்கராகி உள்ளது. துங்கர்பூரில், காங்கிரஸும், பிஎஸ்பி கட்சியும் தலா 14 இடங்களைப் பெற்றுள்ளன. இங்கு 9 இடங்களைக் கொண்டுள்ள பாஜக, முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.
கைர்தல்-திஜாராவில், காங்கிரஸும் பாஜகவும் தலா 10 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக உள்ளனர். ஆர்எல்பி, பிஎஸ்பி மற்றும் சிபிஎம் போன்ற கட்சிகள் மொத்தம் 64 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இருப்பினும், 17 பஞ்சாயத்து சமிதிகளில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஜில்லா பரிஷத்தில் மொத்தம் 1,275 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 794 இடங்களையும், பாஜக 357 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஆர்எல்பி 51, பிஎஸ்பி 43, சிபிஎம் 7 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர்கள் 13 இடங்களையும் வென்றுள்ளனர்.
மொத்தம் உள்ள 7,543 பஞ்சாயத்து சமிதி வார்டுகளில், காங்கிரஸ் 3,758 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக 2,213 இடங்களைக் கைப்பற்றியது. மேலும், ஆர்எல்பி 497, பிஎஸ்பி 278, சிபிஎம் 50 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேச்சை வேட்பாளர்கள் 662 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூறும்போது, “டபுள் இன்ஜின் ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுகிறார்கள். தேர்தல் முடிவுகளுக்காக பொதுமக்களுக்கு நன்றி” என்றார்.