டெல்லியில் நாளை பெரிய அளவில் போராட்டம்: காங். பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்

Updated on: 
1 min read

ஆலப்புழா: இண்டியா கூட்டணி சார்பில் நாளை மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான இண்டியா கூட்டணியின் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை டெல்லியில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தை தொடர்ந்து இண்டியா கூட்டணி தலைவர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தை சந்தித்து, தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான மனுவை வழங்குவார்கள்.

ஞானேஷ் குமாரை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மேற்கொள்ளும் முயற்சிகள் அவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். பிரதமர் மோடி, தனது வீழ்ச்சியை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு தலைவரைப் போல நடந்து கொள்கிறார். அவர் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அஞ்சுகிறார். தேர்தல் செயல்முறை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் மாறும் வரை காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் தங்களது போராட்டத்தைத் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

மம்தா பங்கேற்பு

இப்போராட்டத்தில், மேற்குவங்க முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று திரும்பி செல்வதற்குத் திட்டமிட்டிருந்த மம்தா பானர்ஜி, இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக தனது பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டு, டெல்லியில் தங்கி உள்ளார்.

<div class="paragraphs"><p>காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்</p></div>
ஐஎஸ்எல் தொடர்: பெங்களூரு வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in