

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சிக்கு அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்றும் மாறாக அரசியலமைப்பை அழிப்பதிலும், ஜனநாயகத்தைச் சிதைப்பதிலும் அக்கட்சி ஈடுபட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனநாயகத்தைக் காப்போம்; அராஜகத்தை ஒழிப்போம் என்ற பெயரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் பேரணிகளை நடத்தி வருகிறது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் எப்போதும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பைக் கொல்வதிலும், ஜனநாயகத்தைச் சிதைப்பதிலும், அராஜகத்தை பரப்புவதிலும் ஈடுபட்டு வருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை கையில் ஏந்திச் செல்பவர்களுக்கு அதில் எழுதப்பட்டுள்ளவற்றின் மீதோ அதன் கொள்கைகளைக் காப்பதன் மீதோ உண்மையான நம்பிக்கை இல்லை. அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் எங்கள் கடமை. இதை தெரிவிக்கவே இன்று நாங்கள் மக்கள் முன் வந்துள்ளோம். அராஜகத்தைப் பரப்பி, ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க நினைப்பவர்களின் முகத்திரையைக் கிழிக்க நாங்கள் வந்துள்ளோம்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விவாதத்துக்கு அழைத்து சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்றம் நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த ஆலயமாகும். அங்கு வாருங்கள். விவாதிப்போம். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் விவாதிக்கத் தயங்குமு் நபர்கள் நாங்கள் அல்ல.
அடுத்த 50 ஆண்டுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய மக்கள் தொகை, பயணிகளின் எண்ணிக்கை, எதிர்காலத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன. இந்த மறுசீரமைப்பில் அந்தந்தப் பகுதிகளின் உள்ளூர் கட்டிடக்கலை பாணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் 400 நிலையங்களில் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டன. இந்த செயல்முறை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். பல நாடுகளில் ரயில் நிலையங்களை 5 முதல் 6 ஆண்டுகளுக்கு ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுகின்றன. ஆனால், நமது நாட்டில் ரயில் போக்குவரத்து மிகவும் இன்றியமையாதது என்பதால், நிலையங்களை முழுமையாக மூட முடியாது. எனவே, ரயில் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும், அதேநேரத்தில் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தும் இந்த மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு துர்கா பூஜை, தீபாவளி, சத் பூஜை போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, சுமார் 12,00 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு, கடந்த ஆண்டு இயக்கப்பட்ட ரயில்களுடன் கூடுதலாகப் புதிய சிறப்பு ரயில்களையும் சேர்த்து மொத்தம் 18,000 சிறப்பு ரயில்களை இயக்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைவிட சிறந்த சேதவையை வழங்க நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். எனினும், பயணிகளின் தேவை மிக அதிகமாகவே உள்ளது.” என தெரிவித்தார்.