

சென்னை: தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு ரூ.100க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசு, கூட்டுறவுத் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நியாயமான விலையில் வழங்கும் வகையில், “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” விற்பனைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று (நவம்.05) சென்னை, பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் 15-வது மெயின்ரோடு விற்பனை நிலையத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் பொதுமக்களுக்கு காய்கறித் தொகுப்புகளை வழங்கி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இன்று முதல் (நவம்.05 முதல் 07ம் தேதி) வரை மூன்று நாட்களுக்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100 என்ற சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் 4 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலமாகவும் இத்தொகுப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இத்தொகுப்பில் 500 கிராம் பெரிய வெங்காயம், 500 கிராம் தக்காளி, 250 கிராம் கத்தரிக்காய், 250 கிராம் உருளைக் கிழங்கு, 200 கிராம் கேரட், 200 கிராம் பீன்ஸ், 100 கிராம் பச்சை மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் 400 முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு தேங்காய் என மொத்தம் 10 வகையான காய்கறிகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பின் மொத்த எடை 2.55 முதல் 2.60 கிலோ வரை இருக்கும். இதன் விலை ரூ.100 ஆகும்.
காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் எடையிடப்பட்டு தொகுப்பாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்களுக்கு புதிய மற்றும் தரமான காய்கறிகள் வெளிச்சந்தை விலையைவிடக் குறைவான விலையில் கிடைக்கின்றன. அனைத்துப் பொதுமக்களும் பயன்பெறும் வகையில், கூட்டுறவு விற்பனை நிலையங்களின் வழக்கமான வேலை நேரங்களில் இத்தொகுப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகமான பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படுகிறது.
இத்தொகுப்புகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை சீராக நடைபெறுவதற்குத் தேவையான அறிவுரைகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் மற்றும் மண்டல இணைப் பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் அன்றாட சமையல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், கூட்டுறவுத் துறையின் இச்சிறப்பு விற்பனைத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.