

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம்
புதுடெல்லி: மக்களவை இடங்களை 50% அதிகரிக்கும் திட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தெற்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பாதகமாக அமையும் என்று அக்கட்சி கூறியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்' தளத்தில் கூறியிருப்பதாவது: "மக்களவையின் அளவை 50% அதிகரிக்க மோடி அரசு ஒரு மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற திட்டமிடுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையையும் 50 % அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் 50 % இடங்களை அதிகரிப்பது நியாயமானது என்ற வாதம் ஏமாற்று வேலையாகும்.
தற்போதைக்கு விகிதாச்சாரங்கள் மாறாமல் இருக்கலாம். ஆனால் புறக்கணிக்க முடியாத தாக்கங்கள் இதில் உள்ளன. உதாரணமாக, தற்போது உ.பி.யில் 80 இடங்களும், தமிழ்நாட்டில் 39 இடங்களும் உள்ளன. முன் மொழியப்படும் மசோதாவால், உ.பி.யின் பலம் 120 ஆக உயரும். அதேநேரத்தில் தமிழ்நாட்டின் பலம் அதிகபட்சமாக 59 ஆக மட்டுமே உயரும்.
இதுபோல், கேரளாவின் மக்களவை இடங்கள் 20-ல் இருந்து 30 ஆகவும், பிஹாரின் இடங்கள் 40-ல் இருந்து 60 ஆகவும் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, தென்னிந்திய மாநிலங்கள் 66 இடங்களையும், வட மாநிலங்கள் 200 இடங்களையும் கூடுதலாகப்பெறும்.
தெற்கு, வடகிழக்கு மற்றும் மேற்கில் உள்ள சிறிய மாநிலங்களுக்கு பாதகமான ஒரு சட்டத்தை பிரதமர் மோடி தன்னிச்சையாக தயாரித்து வருகிறார். இது குறித்து தெலங்கானா முதல்வர் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போது மற்றவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அடுத்த மக்களவைத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களிலும், மொத்த இடங்களில் 33% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 2 மசோதாக்களை நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது. இந்த மசோதாவின்படி, மக்களவை இடங்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 543-ல் இருந்து 50% அதிகரித்து 816 ஆக உயரும்.