

தேர்தல் ஆணையத்தின் மீதும் தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பி, ‘வாக்குச்சீட்டு முறைதான் ஜனநாயகத்தின் ரட்சகன்’ என்று காங்கிரஸ் முன்வைத்த வாதம் இப்போது தகர்க்கப்பட்டுள்ளதாக முன்னுதாரணத்தை முன்வைக்கிறது பாஜக.
தொடர் தேர்தல் தோல்விகளால் நிலை குலைந்த காங்கிரஸ் கட்சி, தன் பலவீனங்களை சுயபரிசோதனை செய்வதை விடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) முறைகேடு நடப்பதாக நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருவதாக பாஜக சாடுகிறது. அதாவது 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பறிகொடுத்த பின்புதான் காங்கிரஸ் குற்றச்சாட்டு தீவிரமாகி, மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கோரியதாக எதிர்முகாம்கள் தங்களின் வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.
காங்கிரஸ் கோரிய வாக்குச்சீட்டு முறை
அண்மையில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 28 மேல்சபை (MLC) இடங்களுக்கு, காங்கிரஸ் கோரிய வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடந்தது. இதில் 12 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸை படித்த வாக்காளர்களும் ஆசிரியர்களும் அடியோடு நிராகரித்தனர்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவிலும், பிஹாரிலும் ஓர் இடத்தில் கூட வெல்லாமல் பூஜ்ஜியம் வாங்கியது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் மட்டும் கடைசிவரை போரடி ஓர் இடத்தை வென்ற நிலையில், பாஜக கூட்டணி 16 இடங்களைக் கைப்பற்றியது.
“வாக்குச்சீட்டு முறை வந்தால் நாங்கள்தான் ராஜா” என்ற காங்கிரஸின் வாதத்தை மக்கள் பொய்யாக்கியுள்ளனர் என்றும், “பொத்தானை அழுத்தினாலும் சரி... தாளில் குத்தினாலும் சரி... உங்களுக்குப் பூஜ்ஜியம்தான் என்பதை வாக்காளர்கள் உணர்த்தியுள்ளனர்” என்றும் பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
கடந்த 1988-ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் மின்னணு வாக்கு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, 2004 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முழுமையாக பயன்படுத்தப்பட்டது. 2014 வரை ஆட்சியில் இருந்தபோது இவிஎம் முறையைக் கேள்வி கேட்காத காங்கிரஸ் கட்சி, 2014-க்குப் பிறகு சந்தித்த படுதோல்விகளைத் தொடர்ந்து, தனது தோல்விகளை மறைக்கும் தற்காப்பு உத்தியாகவே மீண்டும் வாக்குச்சீட்டு முறைக் கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கியதாக அக்கட்சியின் மீது குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுவதுண்டு.
பாஜகவின் விமர்சனம்
வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலிலும் காங்கிரஸ் தோற்றதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில், “வாக்குச்சீட்டு முறையில் நடந்த மேல்சபை தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றது தெரியுமா?” எனக் கேலியாக கேள்வி எழுப்பியுள்ளார். ‘இயந்திரத்தில் கோளாறு இல்லை, காங்கிரஸின் நம்பிக்கையில்தான் கோளாறு’ என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் இதனை விமர்சித்துள்ளார்.
தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பத்துக்கும், பாஜகவின் ஆட்சிக்கும், நேரடி நலத்திட்டங்களுக்கும் (DBT) ஈடுகொடுக்க காங்கிரஸ் கட்சியால் முடியவில்லை என்கிற பாஜகவினரின் குரல்களுக்கு இடையில், பாஜகவின் சித்தாந்தத்துக்கு மாற்றாக ஒரு வலுவான தொலைநோக்குத் திட்டத்தையோ, நம்பகமான மாற்றுத் தலைவரையோ முன்வைக்க காங்கிரஸ் தவறிவிட்டது.
தேர்தல் தோல்விகளுக்கு இவிஎம் மீது பழிபோடும் அணுகுமுறையும் மக்களிடையே அந்தக் கட்சி மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என பழமையான அந்த தேசிய கட்சியின் மீது அக்கறை கொண்டவர்கள் கூறி வருகின்றனர்.
வார்த்தைகளில் மட்டும் வாதிட்ட காங்கிரஸ்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய காங்கிரஸ் கட்சி, 2019-ம் ஆண்டில் சையத் ஷுஜா என்ற ‘சைபர் நிபுணர்’ கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ‘தீவிரமானவை’ என்று குறிப்பிட்டது. ஆனால், சையத் கூறியது பொய் என பிற்காலத்தில் தேர்தல் ஆணையத்தால் அம்பலப்படுத்தப்பட்டு அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று கருதும் அரசியல் கட்சிகள் மற்றும் நிபுணர்களை தேர்தல் ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் அழைத்திருந்தது, அங்கு காங்கிரஸ் கட்சி தனது வாதத்தை நிரூபிக்க தவறிவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பலமுறை ஆதாரங்களைக் கேட்டுள்ளது. ராகுல் காந்தியிடம், அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக உறுதிமொழிப் பத்திரத்தைச் சமர்ப்பிக்குமாறும், இல்லையெனில் மன்னிப்பு கோருமாறும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. ஆனால், இரண்டையும் செய்ய அவர் மறுத்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தின் நற்பெயரைக் குலைக்கும் வகையில் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகிறது. உச்சக்கட்டமாக, தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி அரசாங்கத்துடன் கைகோத்தாக தெரிவித்தது.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ‘சவுகிதார் சோர் ஹை’ (காவலாளியே திருடன்) போன்ற பிரச்சாரங்களை பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தியும், காங்கிரஸும் முன்னெடுத்தனர். இதில் உச்ச நீதிமன்றத்தையும் சர்ச்சைக்குள் இழுத்ததால், இறுதியில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த அந்தத் தலைவர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது காங்கிரஸ் மீது எதிர்தரப்பினர் அடுக்கும் குற்றச்சாடுகள்.
காங்கிரஸின் எதிர்காலம் என்ன?
மத்தியில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக முயற்சிகளை செய்து வருகிறது. அதற்காக உழைப்பதற்குப் பதிலாக, பாஜகவுக்கு எதிராக அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுப்பதிலேயே தனது நேரத்தையும் ஆற்றலையும் காங்கிரஸ் செலவிடுகிறது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சோனியா காந்தி குடும்பமே மையப் புள்ளியாகவும், சித்தாந்தங்களைவிட, அந்தக் குடும்பத்தின் மீதான விசுவாசமே தலைவர்களுக்கு முதன்மை. இந்தக் குடும்பத்தின் மீது, குறிப்பாக ராகுல் காந்தியின் மீது, கருத்து வேறுபாடுகளோ, அதிருப்தியோ அல்லது மாற்றுக் கருத்துகளோ இருப்பவர்களுக்கு அக்கட்சியில் இடமில்லை என்பது நிதர்சனம்.
ஆர்.பி.என். சிங், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மிலிந்த் தியோரா, குலாம் நபி ஆசாத், அமரிந்தர் சிங் மற்றும் ஜிதின் பிரசாதா போன்ற மூத்த தலைவர்களும் ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்தில் இருந்து விலகியது இதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பிழைகளைச் சுட்டிக்காட்டுகின்றனர் அக்கட்சியின் நலம் விரும்பிகள்.
காங்கிரஸ் கட்சி இன்னும் வலுவான தலைவர் இல்லாமல் நீண்டகாலமாகத் திணறி வருகிறது. ராகுல் காந்தியை நிழல் தலைவராக கட்சியினர் கொண்டாடினாலும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, கொள்கை, அர்ப்பணிப்புடன் இருப்பதற்குப் பதிலாக, ஏதோ ஒரு வசதிக்காக அரசியலில் இருப்பவர் போலவே காணப்படுகிறார்.
இதற்கு பல சம்பவங்களை உதாராணமாகக் கூற முடியும். முக்கியமான தேர்தல்கள் மற்றும் கட்சி நிகழ்வுகளின்போது திடீரென ராகுல் காந்தி காணாமல் போவது அல்லது நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வ பங்களிப்பை வழங்காமல் அமளியில் ஈடுபடுவதும் என ஒரு தலைவருக்கான தீவிரத்தன்மையை வெளிப்படுத்த தவறிவிடுகிறார்.
பிஹாரின் 'எஸ்.ஐ.ஆர்' விவகாரத்துக்கு எதிராக இண்டியா கூட்டணி யாத்திரை நடத்தியபோது, பாதியிலேயே விட்டுவிட்டு ராகுல் காந்தி வெளிநாடு சென்றார். இதேபோல், கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற பிரசாரத்தையும் ராகுல் காந்தி பாதியிலேயே கைவிட்டார் என ஆதங்கத்துடன் ஒலிக்கிறது மூத்தக் கட்சி நட்புக் குரல்கள்.
காங்கிரஸ் இப்போது இரண்டு தனித்தனி சவால்களை எதிர்கொள்கிறது. வாக்குச்சீட்டு முறையில் ஏற்பட்ட தோல்வியடைந்ததால், தேர்தல் வெளிப்படைத் தன்மைக்கான தனது வாதத்தை ஆதாரங்களுடன் இனிமேல் முன்வைக்க வேண்டும். இரண்டாவதாக தேர்தல் முடிவுகளால் வெளிப்பட்ட அமைப்பு ரீதியான பலவீனங்களை சரி செய்வதாகும்.
இதில் ஏதாவது ஒன்றை கவனக்குறையாக அணுகினாலும், கட்சியை அரசியல் ரீதியாக மேலும் மோசமடையும். வாக்குச்சீட்டு முறையில் கிடைத்த அடி, காங்கிரஸுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை மணி. இவிஎம் மீது பழிபோடுவதை நிறுத்தி, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் காங்கிரஸ் கவனம் செலுத்தாத வரை எந்த முறையில் தேர்தல் நடந்தாலும் மக்கள் முடிவு இப்படித்தான் இருக்கும் என்ற கட்சியினரின் ஆர்வம் தலைமைக்கு எட்ட வேண்டும்.
மிர்சா காலிபின் புகழ்பெற்ற கவிதை வரிகள் காங்கிரஸின் நிலையை மிகச் சரியாக விவரிக்கின்றன. ‘வாழ்நாள் முழுவதும் காலிப் இதே தவறைத்தான் செய்துகொண்டிருந்தார்; அழுக்கு அவரின் முகத்தில் இருந்தது, ஆனால் அவர் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டிருந்தார்’ என காங்கிரஸின் நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன எதிர்முகாம்.