

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனால் தற்போது பிரதமர் நரேந்திர மோடி ‘யு-டர்ன்' அடித்திருக்கிறார்.
கடந்த 2024 ஏப்ரல் 28-ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் கோரிக்கை விடுப்பது, நக்சல் சிந்தனையின் அறிகுறியாகும்” என்று விமர்சித்தார். ஆனால் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகிவிட்டது. ஆனால் இது குறித்த வழிகாட்டு நெறிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் அண்மையில் நடைபெற்றது. இதில் சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்தும் பிரதமரின் நோக்கம் மிகத் தெளிவாகப் புரிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.