புதுடெல்லி: இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் ஷெளர்யா கமாண்டோ பிரிவு அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதிகளில் சீன வீரர்களை தீரத்துடன் எதிர்த்துப் போராடி வருகிறது என்று அந்த படையின் தலைமை இயக்குநர் சத்ருஜித் சிங் கபூர் சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் சீன வீரர்கள் ஊடுருவியிருப்பதாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுதொடர்பாக அருணாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் போசிராம் சிரம், பாசிகாட் நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறும்போது, “அருணாச்சல பிரதேசத்தில் சுார் 50 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எல்லையில் வசிக்கும் மாநில மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இந்த பிரச்சினையை மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் கிரிஷ் காளியா, குப்வாரா பகுதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் “காஷ்மீர் எல்லையில் 10 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்றார். அவரது வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் எடிட் செய்யப்பட்டு, போலி வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.
அந்த போலி வீடியோவில், அருணாச்சல பிரதேசத்தின் அசாபிலா, லாங்ஜோ, டாக்ஸிங் பகுதிகளில் சீன வீரர்கள் ஊடுருவியிருப்பதாகவும் இந்திய ராணுவ வீரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் மேஜர் ஜெனரல் கிரிஷ் காளியா கூறுவதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இது போலி, டீப்பேக் வீடியோ ஆகும். இதுபோன்ற வீடியோக்களை நம்ப வேண்டாம்.
இந்திய எல்லைப் பகுதியில் சீன வாகனங்கள் நுழைந்திருப்பதாகவும் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சீன வாகனங்கள் சிக்கிமின் நாதுலா கணவாய் வழியாக சென்ற சரக்கு வாகனங்கள் ஆகும்.
இத்தகைய வீடியோக்களை பரப்பிய 12 சமூக வலைதள கணக்குகள் கண்டறியப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது