“அரசின் தோல்விகளை மறைக்கவே அன்பில் மகேஸ் கைது” - உதயநிதி கண்டனம்

“அரசின் தோல்விகளை மறைக்கவே அன்பில் மகேஸ் கைது” - உதயநிதி கண்டனம்
Updated on: 
1 min read

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை கைது செய்துள்ள இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - தவெகவினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி முதல்வர்.

சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச் சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது” இவ்வாறு உதயநிதி தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சியில் 2021-26 காலக்கட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பதவி வகித்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி நடந்ததாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் போலீஸில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், சங்க மாநிலப் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக அன்பில் மகேஸ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த முன்ஜாமீன் மனுவை இன்று காலையில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பில் மகேஸ், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“அரசின் தோல்விகளை மறைக்கவே அன்பில் மகேஸ் கைது” - உதயநிதி கண்டனம்
“மக்களின் கவனத்தை திசை திருப்பவே அன்பில் மகேஸ் கைது” - ஸ்டாலின் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in