பெங்களூரு: பெங்களூரு மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக இருக்கும் பெண்களின் கைக்குழந்தைகள், எந்த குற்றமும் செய்யாத நிலையிலும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு கர்நாடக குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகம் மத்திய சிறையில் பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில், நாட்டிலேயே முதல் முறையாக குழந்தைகள் பராமரிப்பு மையத்தை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் சி.வி. சினேகா கூறியதாவது: குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த மையத்தை தொடங்கியுள்ளோம். தற்போது 9 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களுக்கு 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எழுத்துக்கள், எண்கள், பாட்டுகள், நற்பண்புகள் உள்ளிட்டவற்றை கற்று கொடுப்பார்கள்.
குழந்தைகளுக்கு 6 வயது நிறைவடைந்தவுடன், குடும்பத்தினர் பராமரிக்க முன்வராவிட்டால், தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடுகிறோம். தற்போது உள்ள 9 குழந்தைகளில், 3 பேர் வெளிநாட்டினர். மற்றவர்கள் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வாறு அவர் கூறினார்.