

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 70 வயது பட்டயக் கணக்காளர் (சிஏ) அசோக் விஜயவர்கியா. இவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாட்ஸ்- அப் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது.
திவ்யா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், தான் ஒரு முதலீட்டு ஆலோசகர் எனக் கூறியுள்ளார். அவர் ‘USDT டெதர்’ என்ற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மிகக் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதை நம்பிய வர்கியா சிறிய தொகையை முதலீடு செய்துள்ளார். தொடக்கத்தில் அந்த முதலீட்டுக்குப் போலி இணைய தளம் மூலம் லாபம் காட்டப்பட்டது.
மேலும், அவரது நம்பிக்கையைப் பெற உண்மையில் ரூ.1.88 லட்சம் லாபத் தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நம்பிக்கை வந்தவுடன், விஜயவர்கியா மற்றும் அவரது வணிகக் கூட்டாளிகள் அடுத்தடுத்து பெரும் தொகையை முதலீடு செய்துள்ளனர். போலி தளத்தில் ரூ.33 கோடி லாபம் இருப்பது போலக் காட்டியது. ஆனால், அதை சமீபத்தில் எடுக்க முயன்றபோது வருமான வரி மற்றும் ‘ரிஸ்க் மார்ஜின்’ என்ற பெயரில் மேலும் பல கோடிகளைக் கேட்டு உள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த அவர் சைபர் பிரிவு போலீஸாரிடம் புகார் செய்துள்ளார். விஜயவர்கியா மொத்தம் ரூ.21.06 கோடியை இழந்துள்ளார். இந்த மோசடி குறித்து குவாலியர் சைபர் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இதுவரை பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்த சுமார் ரூ.2 கோடியை முடக்கியுள்ளனர்.
திருடப்பட்ட பணம் போலீஸாரிடம் சிக்காமல் இருக்க 4 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள சுமார் 20,000-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு மிக வேகமாக மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த பிறரின் (மியூல்) கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கிரிப்டோ மோசடிக்கு பயன்படுத்திய அமெரிக்க குறியீடுகொண்ட வாட்ஸ்அப் எண் (+1) மற்றும் போலி வர்த்தக இணைய தளத்தின் ஐபி முகவரிகளைப் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.